அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கத் தயாராகிறது.

சமீப மாதங்களில் அமெரிக்காவின் அரசியலில் மிகவும் சூடாகப் பேசப்பட்டு வந்த விடயங்களில் ஒன்று கருக்கலைப்புச் செய்துகொள்வதற்கான உரிமையை மாநில அரசுகள் பறிப்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதாகும். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் தனி மனிதர்களின் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கக்கூடிய சட்டங்களை மாநில அரசுகள் கொண்டுவரலாகாது என்று தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பைக் கிழித்தெறிய நாட்டின் கிறீஸ்தவ பழமைவாதிகள், ரிபப்ளிகன் கட்சியினரின் ஆதரவுடன் செய்துவந்த முயற்சிகள் வெற்றியடைந்திருப்பதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றன. 

டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்த காலத்தில் அமெரிக்கரின் கருக்கலைப்புக்கான உரிமையைப் பறித்தெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பல நகர்வுகள் எடுக்கப்பட்டன. அவைகளில் ஒன்று நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிமன்றத்துக்குப் பழமைவாத ஆதரவாளர்களை நீதிபதிகளாக நியமிப்பது. அவ்விடயத்தில் வெற்றிகண்ட ரிபப்ளிகன் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் தமக்கு ஆதரவான நீதிபதிகளைக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் ரிபப்ளிகன் கட்சியினரின் பழமைவாத ஆதரவுக் கோட்பாடுள்ளவர்கள் 6 பேரும் டெமொகிரடிக் கட்சியினரின் தனி மனித சுதந்திர ஆதரவாளர்கள் 3 பேரும் நீதிபதிகளாக இருக்கிறார்கள். 

2018 இல் மிஸிஸிப்பி மாநிலம் தனது பிராந்தியத்தில் கர்ப்பமாகிப் 15 வது வாரத்தின் பின்னர் எவரும் கருக்கலைப்புச் செய்துகொள்ளலாகாது என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. அதையெதிர்த்து அந்த மாநில மருத்துவசாலை ஒன்று நீதிமன்றத்துக்குப் போனது. அதையடுத்து அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் சில சமீப வருடங்களில் படிப்படியாக வெவ்வேறு சட்டங்களைக் கொண்டுவந்து தமது மாநிலங்களில் கருக்கலைப்புச் சட்டவிரோதமானது என்பதை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. மிஸிஸிப்பி மாநிலத்தின் நீதிமன்றம் அவ்விடயத்தில் நாட்டின் உச்ச நீதிமன்றம் கோட்பாட்டு ரீதியான ஒரு முடிவைக் கொண்டுவந்து வழிகாட்டவேண்டும் என்று கோரியிருக்கிறது.

அந்தப் பின்னணியில் ஜூன் மாதத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டல் தீர்ப்பை வழங்கவருக்கிறது. அத்தீர்ப்புக்கான விபரங்கள் இணையத் தள ஊடகமான பொலிடிக்கோவுக்கு கிடைத்திருப்பதாகத் தெரியவருகிறது. அதன்படி பழமைவாதிகளான ஆறு நீதிபதிகளில் ஐந்து பேர் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கக்கூடிய விதமான தீர்ப்பை வழங்கத் தயாராக இருக்கிறார்கள். 

‘ ………….முன்னர் எடுக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது தனிமனிதர்க தெரிந்தெடுத்த பிரதி நிதிகள் தமது மாநிலங்களில் கருக்கலைப்பைத் தடுக்கும் சட்டங்களைக் கொண்டுவரும் உரிமையைப் பறித்திருக்கிறது. நாம் தனிமனிதர்களின் கருக்கலைப்பு உரிமையை பறிக்கவில்லை. மாறாக, அப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர விரும்பிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்பவர்களின் விருப்பத்தைப் பறிக்கவில்லை. தொடர்ந்தும் மாநிலங்களின் அரசு விரும்பினால் தமது பிராந்தியத்தில் கருக்கலைப்புக்கள் செய்யும் மருத்துவமனைகளை அனுமதிக்கலாம்,’ என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்ட இருப்பதாகத் தெரியவருகிறது.

தனி மனிதச் சுதந்திரத்தைப் பெருமளவில் ஆதரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும் பெரும்பான்மையினரின் கருத்துக்களை எதிர்கொள்ளும் எதிர்வாதங்களைச் செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். தனிமனிதர்களின் கருக்கலைப்புக்கான உரிமை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தால் ஏற்கனவே 1974 இலும், 1992 இலும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டவிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *