இஸ்ராயேல் இராணுவம் கைப்பற்றிய லெபனான் பசுக்கள்.
இஸ்ராயேலின் வட எல்லையிலிருக்கும் லெபனானுடன் “நீலக்கோடு” என்றழைக்கப்படும் சுமார் 11 கி.மீ எல்லை இருக்கிறது. எல்லைக்கருகே லெபனானின் வொஸ்ஸனி என்ற இடையர் கிராமத்திலிருந்து இஸ்ராயேலுக்குள் நுழைந்துவிட்ட பசுக்களை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அவைகளின் உடமையாளர்கள் முறையிட்டிருக்கிறார்கள்.
1970 களில் அவ்வெல்லையூடாக நுழைந்து இஸ்ராயேலுக்குள் தாக்குதல் நடாத்திப் பல இஸ்ராயேலியர்களைக் கொன்றனர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினர். பதிலுக்கு லெபனானுக்குள் நுழைந்து நாட்டின் தென் பிராந்தியத்தைக் கைப்பற்றியது இஸ்ராயேல். பேச்சுவார்த்தைகளின் பின்னர் எல்லைக்குள் திரும்பிய இஸ்ராயேலும் லெபனானும் தொடர்ந்தும் “போர்க்கால நிலைமையிலேயே” தொடர்வதால் குறிப்பிட்ட நீல எல்லை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமது எல்லைக்குள் வந்துவிட்டதால் தமது கட்டுப்பாட்டிலிருப்பதாகச் சொல்லப்படும் ஏழு பசுக்களையும் தாம் திருப்பிக் கொடுப்பதாக இஸ்ராயேல் உறுதியளித்திருக்கிறது. வொஸ்ஸனி கிராமத்தவரோ தமது பசுக்கள் எல்லை தாண்டவில்லை என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
குறிப்பிட்ட எல்லையைக் கண்காணிக்கும் ஐ.நா-வின் அமைதி காக்கும் படையினர் இப்பிரச்சினைக்குள் தலையிட்டுத் தாம் இரண்டு பகுதியினரிடமும் பேச்சுவார்த்தை நடாத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதே சமயம், இன்னொரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தனது கோழி எல்லையைத் தாண்டிப் போனதாகவும் திரும்பி வரவில்லை என்றும் குறிப்பிட்டு, “I want my chicken” என்று டுவீட்டி அது பிரபலமாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்