கலப்பு முறைப் பொது முடக்கம்அடுத்தவாரம் அமுலுக்கு வரும் நாடாளுமன்றத்திலும் விவாதம்
பிரான்ஸில் அடுத்த வாரத் தொடக்கத் தில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகின்ற மூன்றாவது நாடளாவிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு விடப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அரசாங்க வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஏஎப்பி (AFP)செய்திச் சேவை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுடனும் தொழிற் சங்கங்களுடனும் நடத்திய கலந்துரை யாடல்களுக்குப் பின்னரே பிரதமர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்களில் அரைவாசிக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையானோர் பொது முடக்கத்தை எதிர்க்கின்றனர் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை நாடாளுமன்றம் ஊடாக நடைமுறைப் படுத்த எண்ணுகின்றது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் வீரியமான புதிய உருமாற்றங்கள் மிகவேகமாகப் பரவி வருகின்ற நிலையில் நாட்டை முடக்கும் அறிவிப்பை அதிபர் மக்ரோன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது மறுநாள் திங்கட்கிழமை வெளியிடுவார் என்று பாரிஸ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புதிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் முன்னைய இரண்டு பொது முடக்கங்களிலும் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட “ஒரு கலப்பு முறை” கொண்டதாக (“hybrid” confinement) இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாடெங்கும் தொற்றுக்களது ஆகப்பிந்திய நிலைவரத்தை தரவுகளின் அடிப்படையில் விவாதிப்பதற்காக பாதுகாப்புச் சபையின் கூட்டம் எலிஸே மாளிகையில் சனிக்கிழமை கூட்டப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. பின்வரும் மூன்று விதமான கட்டுப்பாட்டு வடிவங்கள் இன்னமும் விவாதங்களில் உள்ளன.
கிழமை நாட்களில் ஊரடங்கு உத்தரவு, வார இறுதியில் (சனி, ஞாயிறு) தினங்களில் முற்றான முடக்கம்.
பாடசாலைகள் இயங்கக் கூடியதாக தளர்வான ஒரு பொது முடக்கம், அல்லது பாலர் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை இயங்க அனுமதித்து கல்லூரிகளையும் இடை நிலை, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களையும் மட்டும் மூடி கட்டுப்பாடுகளை இறுக்குதல் -பெப்ரவரி நடுப்பகுதியில் வருகின்ற குளிர்காலப் பள்ளி விடுமுறையை தொடர்ந்து சிலவாரங்களுக்கு நீடித்தல்.
கடந்த ஆண்டு வைரஸ் பரவலின் தொடக்கத்தில் – வசந்த காலப்பகுதியில்- அமுல் செய்தது போன்று பாடசாலைகள் அனைத்தையும் மூடி மிக இறுக்கமான ஒரு பொது முடக்கம்.
இந்த மூன்று வகைகளையும் ஆராய்ந்து ஒரு கலப்புப் பொறிமுறையாகப் (“hybrid” confinement) புதிய பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.