அஸ்ரா-ஸெனகாவின் தடுப்பு மருந்துகளுக்காக ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் வாய்ச்சண்டை.

அஸ்ரா ஸெனகா நிறுவனம் தம்முடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளைத் தந்துவிடவேண்டும் என்று குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியம், முடியாவிட்டால் அவர்கள் பிரிட்டனில் தயாரிப்பவைகளிலிருந்தாவது அதைத் தரவேண்டுமென்கிறது. அதெல்லாம் நடக்காது என்கிறது பிரிட்டன்.

https://vetrinadai.com/news/astrazenaca-65-vaccine-effect/

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் குறிப்பிட்ட “தடுப்பு மருந்துத் தேசியம்,” உலகின் பல பாகங்களிலும் ஆரம்பமாகிவிட்டதைக் காணலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இவ்வருட ஆரம்பத்தில் விலகிக்கொண்ட பிரிட்டனுடன் அதுபற்றிய இழுபறியில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

“எங்களுக்காக அஸ்ரா ஸெனகா உறுதிசெய்திருக்கும் தடுப்பு மருந்துகள் எங்களுக்கே கிடைக்கும். நாம் எமது மக்களுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுப்பதை இதே வேகத்தில் தொடருவோம்,” என்று குறிப்பிட்டு பிரிட்டனில் தயாரிக்கப்படும் அந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் முதலில் தமக்கே கிடைக்குமென்பதைத் தெளிவுபடுத்தினார் போரிஸ் ஜோன்சன். 

தனது நாட்டின் வயது வந்தவர்களில் 13 % க்கு ஏற்கனவே முதலாவது ஊசியைக் கொடுத்துவிட்ட பிரிட்டன் அந்த நிறுவனத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னரே ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதுடன், குறிப்பிட்ட தடுப்பு மருந்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னரே பாவனைக்கு ஏற்றுக்கொண்டும் விட்டது.  

சந்தர்ப்பம் பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருப்பதை எதிர்க்கும் பிரிட்டர்கள் “விலகியது நல்லதாயிற்று,” என்று மெய்சிலிர்க்கிறார்கள். ஆனால், பிரதமர் போரிஸ் ஜோன்சன் “சில விடயங்களில் அது நல்லதாக இருக்கலாம். ஆனால், தடுப்பு மருந்துகளை மக்களுக்குக் கொடுக்கும் விடயத்தில் சர்வதேச ஒற்றுமையையே நான் விரும்புகிறேன்,” என்று குறிப்பிடுகிறார்.

பிரிட்டனில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளிலிருந்தும் தமக்குத் தரவேண்டும் என்று குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிடும் ஒன்றியத்துடன் கூட்டுறவுக்கான அமைச்சர் மைக்கல் கூவ், பிரிட்டன் தொடர்ந்தும் தனது நாட்டு மக்களுக்கான தடுப்பு மருந்துகளை இதே வேகத்தில் கொடுப்பதை நிறுத்தமுடியாதென்கிறார். பிரிட்டன் பாவிக்கும் தடுப்பு மருந்துகளில் ஒரு பகுதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 27 ம் திகதி புதனன்று அஸ்ரா ஸெனகா நிறுவனப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நிறுவனத்தின் தயாரிப்பை அதிகரிக்கவும், வெவ்வேறு இடங்களில் தயாரிப்பவைகளை ஒருங்கிணைத்துத் தேவையானவர்களுக்கு அனுப்பவும் என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துப் பாவனையை அனுமதிக்கும் அமைப்பு இன்னும் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்தை பாவனைக்கு அனுமதிக்கவில்லை என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

தடுப்பு மருந்துகளுக்கான மூலப்பொருட்களில் இருந்து பெறப்படும் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை திட்டமிட்டதை விடக் குறைவாகவே இருப்பதே நிறுவனம் திட்டமிட்டபடி ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தருவதாகக் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொடுக்கமுடியாமலிருப்பதன் காரணம் என்று நிறுவனத்தின் சார்பில் குறிப்பிடப்படுகிறது.

28.01 பெல்ஜியத்திலிருக்கும் அஸ்ரா ஸெனகா தொழிற்சாலையில் பெல்ஜிய மருந்துக் கண்காணிப்பாளர்கள் அதிரடி விஜயம் செய்து நிலைமையை அறிந்துகொண்டார்கள். அதே நாள் மாலையில் நிறுவனம் தான் கொடுக்கலாமென்று சொன்ன அளவை விட அதிகமான மருந்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கொடுக்கலாம் என்று அறிவித்தது.    சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *