தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.
ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுவாகச் சம்பிரதாயக் கடமைகளுக்காக இருக்கும் ஜனாதிபதிக்கு இவ்விடயத்தில் அறுதிப் பெரும்பான்மை வாக்கைப் பிரயோகிக்கும் உரிமை இருக்கிறது. எனவே, அவர் அதை அங்கீகரிக்கும் பட்சத்தில் அது சட்டமாகும்.
வயதுக்கு வந்தவர்கள் தீராத வியாதியால் பாதிக்கப்பட்டுக் கடும் வேதனையில் வாழும்போது தனது வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினால் அதற்காக மருத்துவ உதவி தரப்படும் என்பதே சட்டத்தின் சாரமாகும்.
கத்தோலிக்க கிறீஸ்தவ நாடான போர்த்துக்கலின் திருச்சபை இறக்க விரும்புபவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதை எதிர்க்கிறது. நாட்டின் ஜனாதிபதி ஒரு பழமைவாதக் கத்தோலிக்கராகும். அவர், தனது அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்திச் சட்டத்தை நிறுத்தினால், பாராளுமன்றம் மீண்டுமொருமுறை விவாதித்து ஆதரவாக வாக்களித்து அதைச் சட்டமாக்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்