கடத்திய தடுப்பு மருந்துகள் உக்ரேனுக்குள் உலாவுகிறதா என்று விசாரிக்க நாட்டின் ஜனாதிபதி உத்தரவு.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவிட் 19 தடுப்பு மருந்து விநியோகத் திட்டமான கொவக்ஸ் மூலம் உக்ரேன் இலைதுளிர்காலத்தில் எட்டு மில்லியன் தடுப்பு மருந்துகளைப் பெறலாம் என்று எதிர்பார்க்கிறது.

ஆனால், சமீப நாட்களில் உக்ரேனின் அதி பணக்காரர்கள் சிலர் நாட்டின் கறுப்புச் சந்தையில் தமக்கான  தடுப்பு மருந்துகளை ஒவ்வொரு ஊசியும் 2,500 என்ற விலைக்குப் பெற்றுக்கொண்டதாக வதந்திகள் பரவியிருப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி ஸெலன்ஸ்கி தெரிவிக்கிறார். உக்ரேனிய நிறுவனத் தலைவரொருவர் அதைத் தனது இணையத்தளத்தில் எழுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு அதுபற்றிய விசாரணைகளை நடாத்தும்படி நாட்டின் நீதித்துறையிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

டிசம்பர் மாத இறுதியில் இஸ்ராயேலிலிருந்து வந்த ஒரு தனியார் விமானத்தில் Pfizer/Biontech இன் தடுப்பு மருந்துகள் உக்ரேனுக்கு வந்திருப்பதாகவும் பணபலமுள்ள சிலர் அவைகளைப் பெற்றுக்கொள்வதாகவும் பிரதமரும் அறிந்திருப்பதாகவும் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கொவக்ஸ் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளுக்கு முன்னதாக சீனாவின் தடுப்பு மருந்துகள் சினோவாக் நிறுவனத்திடமிருந்து இரண்டு மில்லியன்கள் வாங்க ஒழுங்கு செய்திருப்பதாக உக்ரேன் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

“இதுவரை எந்த ஒரு மருந்தும் எங்கள் நாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் எந்த ஒருவரும் களவாக மருந்துகளைத் தருவித்து எமது மக்கள் மீது பாவிப்பது கடும் குற்றம். அதற்காகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்,” என்கிறார் ஜனாதிபதி.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *