3,000 பேருக்கும் அதிகமானோர் பயணித்துவரும் உல்லாசக் கப்பலில் கொவிட் 19 பரவியிருக்கிறது.

நியூ ஓர்லியன்ஸ் நகரிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கூடாகப் பயணிக்கும் நோர்வே நிறுவனமொன்றின் உல்லாசக் கப்பலில் 10 பேருக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலின் ஊழியர்கள், பயணிகளுட்படச் சகலரும் கப்பல் புறப்பட 2 வாரங்களுக்கு முன்னரே தடுப்பூசி பெற்றிருக்கவேண்டுமென்பது உட்படக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பயணிக்கும் கப்பலில் தொற்று ஏற்பட்டது அதன் நிர்வாகிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

நியூ ஓர்லியன்ஸிலிருந்து நவம்பர் 28 திகதி புறப்பட்ட 3,200 பேரைக் கொண்ட அந்தக் கப்பல் பெலீஸ், ஹொண்டுராஸ், மெக்ஸிகோ ஆகிய நாடுகளைத் தொட்டுக்கொண்டு வரும் வாரத்தில் நியூ ஓர்லியன்ஸ் நகருக்குத் திரும்பிவரவிருக்கிறது. 

திரும்பி வரும் துறைமுகத்தில் கப்பலிலுள்ள சகலரும் தொற்றுக்கான பரிசோதிப்புக்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். தொற்றுள்ளவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். தொற்று ஏற்பட்டுள்ள 10 பேரின் உடல்நிலை பற்றி மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்