மெக்ஸிகோவின் மீண்டுமொரு கொடூரமான கூட்டுக் கொலை.
போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குப் பெயர்போன மெக்ஸிகோவில் கொடூரமான முறையில் பலரை ஒரேயடியாகக் கொல்வது பல தடவைகள் நடந்திருக்கின்றது. இம்முறை கொல்லப்பட்டிருப்பவர்கள் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற ஏழை அகதிகளையாகும்.
அமெரிக்காவில் தஞ்சம் கேட்பதற்காக வருடாவருடம் பல்லாயிரக்கணக்கானவர்கள் தென்னமெரிக்க நாடுகளிலிருந்து போவதுண்டு. குவாத்தமாலா, ஹொண்டுரஸ் ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் கூட்டம், கூட்டமாக நடந்தும், வாகனங்களிலும் போவதுண்டு. கொவிட் 19 கட்டுப்பாடுகள், அகதிகளை உள்ளே விட மறுத்த டிரம்ப்பின் நிலைப்பாடு ஆகியவைகளால் குறைந்திருந்த அந்தத் தொகை ஜோ பைடன் அரசு பதவியேற்றதை அடுத்து அதிகரித்திருக்கிறது.
இந்தக் கூட்டுக் கொலையில் 19 பேரையும் இரண்டு பாரவண்டிகளுக்குள் வைத்துச் சுட்டுக் கொன்றதுடன் அவர்களுடைய உடல்களையும் எரித்துப் போட்டிருப்பது மிகவும் கோரமான காட்சியாக இருக்கிறது என்று அதைப் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். 2011, 2012 ம் ஆண்டுகளிலும் தஞ்சம் கோரச் சென்றவர்கள் 130 பேர் கூட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கொரூர முறையின் காரணம் அப்பகுதியில் [Tamaulipas]
போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபடும் குழு “எங்களுக்குக் கப்பம் கொடுக்காமல் இதனூடாகப் போக முடியாது,” என்று அகதிகளாகப் போகிறவர்களுக்கு எச்சரிக்கை விடுவதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வழமையாக போதை மருந்துக் குழுக்கள் தமது எதிர்க் குழுக்களையும், காட்டிக் கொடுப்பவர்களைக் குடும்பங்களுடனும் ஒழித்துக் கட்டிப் புதைத்துவிடுவதுண்டு. அத்துடன், மெக்ஸிகோ இராணுவம், பொலீஸ் ஆகியவையும் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டதுண்டு. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 2,400 பேர்களின் உடல்கள் குழிகளில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன, 17,000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்