தீவிரவாத இஸ்லாமியர்களின் குறிகளுக்குத் தப்பி வாழ்ந்த கலைஞர் வீதி விபத்தொன்றில் இறந்தார்.
சுவீடனைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய கலைஞர் லார்ஸ் வில்க் தனது கவனத்தைக் கவரும் படைப்புக்கள் மூலமாக நீண்ட காலமாகவே ஸ்கண்டினேவிய நாடுகளில் பிரபலமானவர். சர்வதேச ரீதியில் அவரது பெயரைப் பரப்பியது “ரவுண்டானா நாய்” [Roundabout Dog] என்ற படைப்பாகும். அவைகளுக்காக அவரைக் கொல்லும்படி சில இஸ்லாமியப் போதகர்கள் அறைகூவியிருந்தார்கள்.
2006 இல் தீர்க்கதரிசி முஹம்மதுவின் உருவில் சிற்பங்களைச் செய்து சுவீடனில் ரவுண்டானாக்களில் வைத்திருந்தார் லார்ஸ் வில்க். அது வேறு சில நாடுகளுக்கும் பரவியது. பல நாடுகளிலிருந்தும் அவரைக் குறிவைத்துக் கொலை செய்யவும் முயற்சிகள் ஆரம்பித்தன, நடந்தன.
“அதிகாரவர்க்கத்துடன் மோதுவது என்பது கலையின் இயல்பாகும்,” என்று பல தடவைகள் குறிப்பிட்டிருக்கும் வில்க் சுவீடன் நாட்டு அதிகாரங்களுக்குச் சவாலாகவும் பல இடங்களில் தனது கலைப்படைப்புக்களை உண்டாக்கியிருப்பவராகும்.
கருத்துச்சுதந்திரத்தின் எல்லையை பரிசோதிக்கவும், நிலை நிறுத்தவுமே தான் கலைஞராக இருப்பதாகக் குறிப்பிட்டு வந்த வில்க் இஸ்லாத்தையோ, அதன் ஸ்தாபகர் முஹம்மதுவையோ எவரும் விமர்சிக்கலாகாது என்ற பழமைவாத இஸ்லாமியர்களுடன் மோதவே ரவுண்டானா நாய்களைப் படைத்தார்.
லார்ஸ் வில்க்கைக் கொல்வதற்காக மூன்று தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டுத் தோற்றுப் போயின. அது தவிர வேறு கொலை முயற்சிகளும் இடைவழியில் தடுக்கப்பட்டன. பொலீஸ் பாதுகாப்பிலேயே அவர் அதன் பின்னர் தன் முழு நாளையும் செலவழித்து வந்தார். அவரது நகர்வுகள் அதனால் பலமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
ஞாயிறன்று பிற்பகல் வழக்கம்போல தனது இரண்டு பாதுகாவலர்களுடன் பாதுகாப்புக்கு வாகனத்தில் சென்ற வில்க் வீதி விபத்தொன்றில் இறந்தார். 75 வயதான அவருடன் கூடச் சென்ற பாதுகாவலர்கள் இருவரும் அதே விபத்தில் இறந்தனர்.
நடுவே பலமான வயர்களால் எல்லை போடப்பட்ட மோட்டார் வீதியில் பயணமாகி வந்த அவரது வண்டியின் டயர் வெடித்ததால் அந்த வாகனம் எல்லையை உடைத்துக்கொண்டு அடுத்த பக்கத்துக்குப் பாய்ந்து எதிர்ப்பக்கமாக வந்துகொண்டிருந்த பாரவண்டி ஒன்றின் மீது மோதியதாலேயே அந்த விபத்து நேர்ந்திருப்பதாகப் பொலீசார் சந்தேகப்படுகிறார்கள். மிகவும் அசாதாரணமான அந்த விபத்தின் காரணம் அவர் பயணித்த வண்டி 4.5 தொன் பாரமுள்ளது என்பதால் எல்லையை உடைத்துக்கொண்டு எதிர்ப்பக்கத்துக்குச் சென்றதே என்று குறிப்பிடும் பொலீசார் அவ்விபத்தின் பின்னணியில் வேறெந்தச் சக்தியும் இல்லையென்றே நம்புவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்