டொங்காவுக்குள் கொவிட் 19 நுழைந்துவிட்டது, பொது முடக்கம் அறிவித்தாயிற்று.
இரண்டு வருடங்களாயிற்று உலகமெங்கும் கொவிட் 19 பரவ ஆரம்பித்து, ஆனால் பசுபிக் கடல் தீவுகளான டொங்கா இதுவரை அக்கொடும் வியாதிக்குத் தப்பியிருந்தது. அதன் எல்லைகள் வெளிநாட்டினருக்கு இதுவரை மூடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மாதத்தில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலால் உண்டாகிய பேரழிவுக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து சகல உதவிகளையும் அந்த நாடு பெறவேண்டியிருந்தது. அத்துடன் கொவிட் 19 ம் அங்கே பரவத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
சுமார் 105,000 சனத்தொகை கொண்ட டொங்கா தீவுகளில் கடந்த ஒக்டோபரில் சமயம் பரப்புகிறவர் ஒருவர் வெளிநாடு சென்று திரும்பி வந்தபோது கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியிருந்தது. வேறெவருக்கும் அது இரண்டு வருடங்களாகப் பரவியிருக்கவில்லை. தற்போது வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டாலும் ஒரு சிலருக்கு அவ்வியாதி தொற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.
டொங்கா மக்களில் 61 % தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அங்கே அது பரவலாகத் தொற்றாததால் இயற்கையான நோயெதிர்ப்புச் சக்தி பொதுவாக எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களின் நோயெதிர்ப்பு தொடர்ந்தும் இயங்குகிறதா என்பதும் அறியாத நிலையில் அரசு மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
தொலைத்தொடர்புகள், மருந்துவ சேவைகள் தொடர்ந்தும் நாட்டில் சகஜமாக இயங்கவில்லை. தலைநகருக்குத் தூரத்திலிருக்கும் தீவுகளில் வாழ்பவர்களுடன் ஒழுங்காகத் தொடர்புகளில்லை. உதவி இயக்கங்கள் பல விதங்களிலும் தங்கள் சேவையைச் செய்துகொண்டிருக்கின்றன. உதவிப் பொருட்களைக் கொண்டுவந்த கப்பலில் வேலை செய்பவர்கள் சிலர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
டொங்காவில் தொற்றியிருந்தவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களின் தொற்று நிலைமை பற்றி ஆராயப்பட்டு வருகிறது. அவசர அவசரமாக புதனன்று மாலை முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்