அரசியலில் அடிபட்ட ஜோன்சனுக்கு நெருக்கமான ஆலோசர்கள் ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருக்கிறார்கள்.

“பார்ட்டிகேட்” விபரங்களால் அரசியல் சூறாவளிக்குள் சிக்கியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையின் அந்திம காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறதா என்று பல அரசியல் வல்லுனர்களும் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு நெருங்கிய வட்டத்திலிருந்து ஒரே நாளிலேயே பலர் தாம் தமது பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

லண்டனின் ஆளுனராக ஜோன்சன் பதவியிலிருந்த காலத்திலிருந்தே அவரது நெருங்கிய ஆலோசகர் பதவியில் செயற்பட்டுவந்த முனிரா மிர்ஸா விலகிக்கொள்வதுடன் அது ஆரம்பித்தது. எதிர்க்கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர் மீது ஜோன்சன் பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்ததை எதிர்த்தே தான் பதவியிலிருந்து விலகுவதாக 14 வருடங்களாக ஜோன்சனின் உதவியாளராகப் பதவியாற்றிய மிர்ஸா குறிப்பிட்டிருந்தார்.  

மிர்ஸாவின் விலகலுக்குப் பின்னர் அடுத்தடுத்து மேலும் மூன்று உதவியாளர்கள் ஜோன்சனின் நெருக்கமான ஆலோசகர் வட்டத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். டவுனிங் ஸ்டிரீட் 10 விருந்துகளுக்கு அழைப்பிதழ் அனுப்பிய உதவியாளர், ஜோன்சனின் பொதுமக்கள் தொடர்பு ஆலோசகர் ஆகியோரும் அவர்களில் அடக்கம்.

ஜோன்சனின் அரசாங்கம் கவிழ்ந்துகொண்டிருக்கும் கப்பல் நிலையிலிருப்பதாக குறிப்பிட்ட பதவி விலகல்களைப் பலரும் கவனிக்கிறார்கள். ஜோன்சன் தான் பங்குபற்றிய விருந்துகள் பற்றிய விபரங்கள், விமர்சனங்களை அடுத்துத் தனது நெருங்கிய வட்ட உதவியாளர்களிடையே களையெடுப்பு நடத்தி, டவுணிங் ஸ்டிரீட்டில் ஒழுங்கான சூழலைக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார். விலகுபவர்களை ஜோன்சன் தான் தள்ளிவைத்திருக்கிறார் என்றும் ஒரு சிலரின் குரல் ஒலிக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்