இளவரசர் ஆண்டிரூவின் இராணுவ, அரச குடும்பப் பட்டங்களெல்லாம் புடுங்கப்பட்டன.

பொலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்ட பிரபலமான, பெரும் பணக்காரர் ஜெப்ரி எப்ஸ்டைன் வயதுக்கு வராத பெண்கள் பலரைப் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்த ஒழுங்குசெய்து கொடுத்தார் என்ற வழக்கில் எப்ஸ்டைனுக்கு அவ்விடயத்தில் கையாளாக இருந்தார் என்று ஜிஸ்லேன் மக்ஸ்வெல் என்ற பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவ்விருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்த இளவரசர் ஆண்டிரூ தன்னைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதாக வெர்ஜினியா ஜிப்ரே என்ற பெண் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தனக்குப் பதினேழு வயதாக இருக்கும்போது எப்ஸ்டைன், மாக்ஸ்வெல் ஆகியோர் மூலம் தன்னைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தினார் இளவரசர் என்று வெர்ஜீனியா குற்றஞ்சாட்டி வருகிறார். வெர்ஜீனியாவின் வழக்கை நீதிமன்றம் விசாரிக்கலாகாது என்று பல விதங்களில் அவ்வழக்கிலிருந்து விடுபட இளவரசர்  முயற்சி செய்தும் நீதிபதி லூயிஸ் கப்ளான் அவ்வழக்கு தொடர்ந்தும் நடாத்தப்படும் என்று புதனன்று அறிவித்திருந்தார்.

“இளவரசர் ஆண்டிரூ மீது நான் போட்டிருக்கும் வழக்கைத் தொடர அனுமதித்திருக்கும் நீதிபதிக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது குற்றச்சாட்டைப் பலமான முறையில் உலகறிய எடுத்துரைத்து வரும் எனது வழக்கறிஞர் குழுவினருக்கு நான் நன்று சொல்கிறேன்,” என்று வெர்ஜினியா ஜிப்ரே டுவீட்டியிருந்தார்.

இளவரசர் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய வழக்கு நடக்கவிருக்கிறது, அவர் நடந்துவரும் எப்ஸ்டைன், மாக்ஸ்வெல் ஆகியோர் மீதான வழக்குகளில் சாட்சியாக அழைக்கப்படலாம்,  என்பதைத் தெரிந்துகொண்டதும் அது பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருடைய பெயருக்குப் கடுமையான களங்கம் விளைவிக்கும் என்பதை மகாராணி எலிசபெத் புரிந்துகொண்டார். அதனால் தனது “விருப்பத்துக்குரிய மகன்” என்று குறிப்பிட்டு வந்த இளவரசர் ஆண்டிரூ மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்.

மகாராணியின் அனுமதியுடன் இளவரசரின் இராணுவ, அரச குடும்ப கௌரவப் பட்டங்களெல்லாம் பறிக்கப்பட்டதாக பக்கிங்காம் அரண்மனை வியாழனன்று அறிவித்தது. அவர் இனிமேல் “மேன்மையான அரசன்” [ His Highness] என்று குறிப்பிடப்படமாட்டார், அரச குடும்பத்தின் பிரதிநிதியாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்