தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்த “விசா ரத்து” வாள் வீழ்ந்தது யோக்கோவிச் மீது.

ஏற்கனவே எச்சரித்தது போலவே ஆஸ்ரேலியாவின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் அமைச்சருக்கான தனது பிரத்தியேக முடிவைப் பாவித்து யோக்கோவிச்சை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார். 

“மக்கள் ஆரோக்கியம் போன்ற நியாயமான காரணங்களுக்காக நான் எனது பதவியின் அதிகாரத்தைப் பாவித்து நோவாக் யோக்கோவிச்சின் விசாவை ரத்து செய்யும் முடிவை எடுத்திருக்கிறேன். பெரும்பாலானோரின் நலம் கருதியே இந்த முடிவு என்னால் எடுக்கப்பட்டிருக்கிறது,” என்று அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது. 

ஆஸ்ரேலியாவின் புதிய முடிவை எதிர்த்து யோக்கோவிச் மேன்முறையீடு செய்யக்கூடுமா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கான முடிவை எடுப்பதற்கான யோசனைகளில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. யோக்கோவிச் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதுடன் மூன்று வருடங்களுக்கு ஆஸ்ரேலியாவுக்குள் நுழையமுடியாதபடி விசா பறிப்பு முடிவு செயற்படும் என்று தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்