தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் யோக்கோவிச் ஆஸ்ரேலியப் போட்டிகளில் பங்குபற்றுவது நிச்சயமில்லை.

திங்களன்று ஆஸ்ரேலிய நீதிமன்றமொன்றின் உத்தரவுப்படி டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் யோக்கோவிச் கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். “என் விசா ரத்து செய்யப்பட்டதைத் தடைசெய்த நீதிபதிக்கு நன்றி,” என்று டுவீட்டிய யோக்கோவிச் டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டார். விமான நிலையத்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் யோக்கோவிச் வந்திறங்கியதும் அவரது விசாவை ரத்து செய்ய முதல் அதுபற்றி யோசிக்க, திட்டமிட அவருக்குப் போதிய அளவு நேரம் கொடுக்கப்படவில்லை என்பது நீதிபதி அண்டனி கெல்லி அவரை விடுவிக்கக் காரணமாக இருந்தது.

தனது கவனத்தை ஆஸ்ரேலிய டென்னில் கோப்பையை மீண்டும் வெல்வதில் செலவழிக்கப்போவதாக யோக்கோவிச் குறிப்பிட்டார். அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தவர்கள் உலகில் பல பாகங்களிலிருந்தும் அவரது விடுதலையைப் பற்றிப் பெரும் வெற்றியென்று அறிக்கை விட்டிருந்தார்கள். தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்களுக்கு இவ்விடயத்தில் ஆஸ்ரேலிய அரசின் தோல்வி பெரும் ஊக்காக அமைந்திருக்கிறது.

நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டாலும் யோக்கோவிச்சின் விசா மீண்டும் பின்வாங்கப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் இருக்கிறது. ஆஸ்ரேலியாவின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் அமைச்சருக்கான தனது பிரத்தியேக முடிவைப் பாவித்து யோக்கோவிச்சை நாட்டை விட்டு வெளியேற்ற யோசிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

ஆஸ்ரேலியர்களிடையே ஒமெக்ரோன் திரிபு பெரிதும் பரவி வருகிறது. இச்சமயத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத யோக்கோவிச்சுக்கு நாட்டுக்குள் வந்து விளையாட அனுமதி கொடுப்பட்டிருப்பது நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை என்ற கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

திங்களன்று போட்டிகள் ஆரம்பமாகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்