மத்திய கிழக்கில் அமெரிக்கா விட்டுவிட்ட வெற்றிடங்களை முதலீடுகளால் நிரப்புகிறது சீனா.
சீனா தனது முதலீடுகளை உலகின் மற்றைய பாகங்களில் குறைத்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் ஆவேசமாக உயர்த்திக்கொண்டிருக்கிறது. ஜோ பைடன் ஜனாதிபதியான பின்பு அமெரிக்கா தனது கைகளை மெதுவாக மத்திய கிழக்கிலிருந்து கழுவிக்கொண்டிருக்கிறது. அந்த இடத்தைச் சீனா ஆக்ரோஷத்துடன் கைப்பற்றிக்கொண்டிருப்பதாக அரசியல், பொருளாதார அவதானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தென்கிழக்காசியா, தென்னமெரிக்க நாடுகளில் செய்தது போலவே மத்திய கிழக்கிலும் சீனா பல கட்டுமான வேலைகளில் முதலீடுகளைச் செய்து வருகிறது. பெருமளவு முதலீடுகளைக் கடந்த வருடம் சீனா செய்த நாடு ஈராக் ஆகும். ஈராக்கில் மட்டும் சீனா கடந்த வருடம் சுமார் 10 பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடுகளைச் செய்தது.
நெடுஞ்சாலைகளை, பாலங்கள், மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள் போன்றவற்றைச் சீனா ஈராக்கில் கட்டி வருகிறது. பாடசாலைகள் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான அளவில் கட்டிக் கொடுக்கிறது சீனா. அதைத் தவிர எரிநெய், இயற்கை வாயு ஆகியவற்றை உறிஞ்சும் மையங்களிலும் சீனா முதலீடு செய்திருக்கிறது.
போருக்குள் அகப்பட்டு நீண்ட காலமாகச் சகல துறைகளிலும் சிதைந்துபோயிருக்கும் ஈராக்கின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் மோசமாகவே இருந்து வருகிறது. எனவே மேற்கு நாடுகள் அங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தத் தருணத்தில் சீனர்களின் முதலீடுகள் ஈராக்கியர்களுக்கு வரமாக அமைந்திருக்கின்றன. சீனாவோ மத்திய கிழக்கில் தனது காலடிகளை நிரந்திரமாகப் பதிக்க அச்சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்