துருக்கியில் இயங்க அனுமதி பெற சர்வதேச ஊடகங்களுக்கு 72 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது..
தனது நாட்டில் இயங்கும் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து அங்கே இயங்க விரும்பினால் அதற்கான தேசிய ஊடக அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று துருக்கி அறிவித்திருக்கிறது. 72 மணி நேரத்துக்குள் அதை அவர்கள் நிறைவேற்றத் தவறினால் அவர்கள் துருக்கியில் செயற்பட முடியாது என்கிறது அந்த அறிவிப்பு.
நீண்ட காலமாகவே துருக்கியின் ஜனாதிபதி தனது நாட்டின் ஊடகங்களையும், அத்துறையில் ஈடுபடுகிறவர்களையும் கட்டுப்படுத்தி விமர்சனங்களில் ஈடுபடுகிறவர்களைப் பல வழிகளிலும் தொல்லைப்படுத்துவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பல தேசிய ஊடகங்களும், விமர்சகர்களும் ஆளும் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவே குறிப்பிடப்படுகிறது. 90 விகிதமான துருக்கிய ஊடகங்களை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அங்கே செயற்படும் வெளிநாட்டு ஊடகங்கள் மீது, அடுத்த கட்டமாக ஜனாதிபதி எர்டகான் தனது கவனத்தைத் திருப்பியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்