தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளைப் பாவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கமில்லா வலயேவா 4 வது இடத்தில்.
நோவாக் யோக்கோவிச்சுக்குப் பின்னர் சமீபத்தில் விளையாட்டுலகில் பெரிதும் சர்ச்சைக்குள்ளான பெயர் ரஷ்யா வீராங்கனை கமில்லா வலயேவா ஆகும். பீஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டில் பனித்தரை நடனப்போட்டியில் ரஷ்ய விளையாட்டுக் குழுவுடன் நடனமாடித் தங்கத்தைப் பெற்ற இவரது வயது 15 மட்டுமே. ஆனால், டிசம்பர் மாதத்தின் போது இவர் தடைசெய்யப்பட்ட மருந்தைப் பாவித்திருந்தார் என்பது பின்பு தெரியவந்ததால் அந்த வெற்றி கேள்விக்குறியாகியது.
ரஷ்ய அணியினர் தமது முதலிடம் பறிக்கப்பட்டதை எதிர்த்து விளையாட்டுப் போட்டிகளின் நீதிமன்றத்தில் புகார் செய்தனர். அதை விசாரித்த அந்த நீதிமன்றத்தின் முன் வலயேவா தான் தவறுதலாகத் தனது பாட்டனார் பாவிக்கும் இருதய வியாதிக்கான மருந்தை ஒரு குவளையிருந்து குடித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். அந்த மருந்தே போட்டியிடும் வீரர்கள் பாவிக்கத் தவிர்ந்த மருந்தாகும். அதைத் தவிர மேலும் இரண்டு மருந்துகளும் வலயேவா பாவித்தது தெரிந்தது. அவற்றைத் தனது இருதய வியாதிக்காகப் பாவிப்பதாக அவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
விசாரணையின் பின்னர் கமில்லா வலயேவாவின் குறைந்த வயதைச் சுட்டிக்காட்டி அவரைத் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டார். வலயேவாவைத் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தாலும் அவர் வெற்றியெடுத்தால் அவருக்கான பதக்கங்கள் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படாது என்று ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு முடிவு செய்திருந்தது.
வலயேவாவைத் தொடர்ந்தும் போட்டியில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டது விளையாட்டுப் போட்டியாளர் உலகில் பெரும் அதிர்ச்சியையும், பல விமர்சனங்களையும் உண்டாக்கியது. இதற்கு முன்னர் ரஷ்ய விளையாட்டு அமைப்புத் தனது வீரர்களுக்குத் திட்டமிட்டுத் தடுக்கப்பட்ட மருந்துகளைக் கொடுத்தது தெரியவந்ததால் பீஜிங் போட்டிகளில் ரஷ்யா தனது கொடியுடன் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் மீண்டும் ஒரு ரஷ்ய வீரர் தவிர்க்கப்பட்ட மருந்தைப் பாவித்தது தெரிந்த பின்னரும் அவரைத் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிப்பதா என்று பல நாடுகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மீண்டும் போட்டிகளில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த வலயேவா வியாழனன்று ஒற்றையராகப் பனித்தரையில் நடனமாடும் போட்டியில் பங்குபற்றியிருந்தார். 15 வயதில் இதுவரை எவராலும் செய்யமுடியாத நாட்டிய நுட்பங்களைக் காட்டி முதலாவது குழுப்போட்டியில் வென்ற அவர் மீண்டும் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் போட்டியில் நாலாவது இடத்தையே பெற முடிந்திருக்கிறது. வலயேவா தனது தோல்விக்குப் பின்னர் மனமுடைந்து அழுதார்.
சாள்ஸ் ஜெ. போமன்