கனவு

குழந்தை கதையாக்கிய  உண்மை

சின்னஞ்சிறு குழந்தைகளை பார்க்கும் போது, அவர்களின் முகத்தில் என் தம்பியை பார்ப்பது போல தான் இருக்கும்.

மற்றவர்கள்  போல் என்னுடனும் பேசி விளையாட , சண்டையிட எனக்கும் ஒரு தம்பி , தங்கை வேண்டும் என்று ஆசை.

என் தாயும் கருவுற்றாள். உறவுகள் அனைவரும் உனக்கு ஒரு தம்பி வர போகிறான் என்றார்கள்.

நானும் என் கனவு நனவாக போகிறது , என்னுடன் விளையாட தம்பி வர போகிறான் என ஆனந்தம் கொண்டேன்.

நாட்கள் சென்றன. அம்மா வயிற்றில் தம்பி வளர வளர என் ஆசைகளும், கற்பனைகளும் அதிகமாகியது.

என் தம்பி எப்படி இருப்பான், அவன் கை எப்படி இருக்கும், என்னை எப்படி அழைப்பான், அவன் வீட்டிற்கு வந்ததும் அவன் செய்யும் சேட்டைகள் என அனைத்தையும் கற்பனை செய்து நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தேன்.

தம்பி  வீட்டிற்கு வந்ததும் அவனுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி பார்த்துக் கொள்ள போகிறேன் என்று அம்மாவிடம் கூறிக்கொண்டே இருப்பேன்.

அம்மா சொல்வார்கள் இப்போது இப்படி தான் சொல்வாய், அவன் வந்ததும், அவன் செய்யும் குறும்புகளை பார்த்து நீ  அவனிடம்  சண்டை போடுவாய் என்றார்கள்.

அவர்களுக்கு எப்படி தெரியும் அவன் தான் என் கனவு என்று. நான் அமைதியாக இருந்தேன். என் பாசத்தைச்  சொல்லி புரிய வைக்க முடியாது, செயலில் உணர்த்தி காட்டுகிறேன் என்று.

அவனுக்காக ஒவ்வொரு பொருட்களையும் பார்த்துப் பார்த்து வாங்கி வைத்தேன். அம்மா உறங்கும் போது தம்பியுடன் பேசிக் கொண்டே இருப்பேன்.

இப்படியே நாட்கள் சென்றது. தம்பியை காண இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருந்தது. மனதில் இனம்புரியாத சந்தோஷம் எனக்கென்று ஒரு உறவு , பல வருட தவம், வேண்டுதல், இப்படி எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம். அவனுக்கு ஒரு  பெயரும் இட்டு, என் தம்பி இப்படி தான் இருப்பான் என்று ஒரு ஓவியமும் வரைந்து வைத்தேன்.

அம்மாவும் அப்பாவும் மருத்துவமனை சென்றார்கள், நான் தனியாக வீட்டில் இருந்தேன். நேரங்கள் போய்க் கொண்டே இருந்தது,  என்ன சொல்லி இருப்பார்கள், அம்மா எப்போது வருவார்கள் என்று கடிகாரத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

படிக்க மறந்தேன், உண்ண மறந்தேன் என் நினைவு அனைத்தும் என் தம்பி எப்போது பார்ப்பேன் என்று மட்டுமே இருந்தது. அப்பாவின் வண்டி சத்தம் கேட்டது விரைவாக ஓடி அம்மா என்ன சொன்னார்கள், தம்பி எப்போது வருவான் என ஆவலுடன் கேட்டேன்.

அம்மா அழுதாள், அப்பா அமைதியாக இருந்தார் என்ன ஆயிற்று அம்மா அழாதே நீ அழுதால், தம்பியும் அழுவான் என்று அம்மாவின் கண்ணீரை துடைத்தேன்,

அம்மா என்னை வாரி அணைத்துக்கொண்டு தங்கமே தம்பி இனி வர மாட்டான் என்றார்கள், எனக்கு புரியவில்லை அம்மாவின் வயிற்றில் தானே தம்பி இருக்கிறான் ஏன் இப்படி சொல்கிறார் என்று.

அப்போது தான் பக்கத்து வீட்டு அத்தை வந்தார், எதற்காக அழுகிறாய் என அம்மாவிடம் கேட்டார், அப்போது தான் அம்மா சொன்னாள் தம்பி அம்மாவின் வயிற்றிலேயே இறந்து விட்டான் என சொல்லி அழுதார்கள்.

நான் மனம் தளர வில்லை , எனக்கு நம்பிக்கை இருந்தது தம்பி வருவான் எனக் கூறி  அப்போது தான் முதல் முறையாக நான் வரைந்து வைத்த ஓவியத்தை அம்மாவிடம் கொடுத்து நீங்கள் மருத்துவமனை செல்லுங்கள் வரும் போது என் தம்பியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்றேன். நான் கூறியதே கேட்டதும்  அம்மா, அப்பா , அத்தை என அனைவரும் அழுதார்கள்.

நான் அத்தை வீட்டில் இருந்தேன், கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தேன். அம்மா மருத்துவமனை சென்றுவிட்டார்கள். ஐந்து நாட்கள் கடந்து தான் என் அம்மாவை பார்த்தேன், என்னைப் பார்த்ததும் உன் தம்பியை என்னால் உன்னிடம் கொடுக்க முடியவில்லை என்று சொல்லி அழுதாள்.

அம்மாவின் கண்ணீரை துடைத்து உங்களுக்கு நான் இருக்கிறேன் என்றேன்.  அன்பு தம்பியே  நீ என்னையும் பார்க்கவில்லை, நானும் உன் அழகு முகத்தையும் பார்க்கவில்லை,  என் கனவு பொய்யாக போய் இருந்தாலும், நான்  உன் மீது வைத்த பாசம் என்றென்றும் மாறாது.

நீ இல்லாவிட்டாலும் உன்னுடன் நான் இருந்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலங்கள். நீயே என் தம்பி. அவன் பெயர் தான் குகன்.

 என்றென்றும்
 உன்னை மறவா
 உன் அக்கா க. தர்ஷனா.