பொலீசாரின் இரண்டு நாள் நடவடிக்கைகளின் பின்பு ஒட்டாவாவின் நிலைமை ஒழுங்கானது.

ஒட்டாவா நகரத்தின் வீதிகளை மறித்துப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து, மக்களின் வாழ்வின் ஒழுங்கைச் சீரழித்து வந்த “சுதந்திர வாகனத் தொடரணி” போராட்டம் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வன்முறைப் போராட்டங்களை எதிர்கொள்ளும் ஆயுதங்கள், தளபாடங்களுடன் களத்தில் குதித்த பொலீசார் இரண்டு நாட்களில் நகரை ஒழுங்குக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

முக்கிய வீதிகளை மறித்திருந்த 57 கனரக வாகனங்களைப் பொலீசார் அகற்றினார்கள். 191 பேரைக் கைதுசெய்தார்கள். போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்குப் பொருளாதார உதவி செய்தோர்கள் நூற்றுக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. முடக்கப்பட்ட தொகை சுமார் 32 மில்லியன் கனடிய டொலர் என்று குறிப்பிடப்படுகிறது.

நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகள் சமீப நாட்களில் பெரும்பாலும் அகற்றப்பட்டாலும் கைது செய்தவர்களை, வன்முறையில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்னர் நிறுத்தித் தண்டிக்கவிருப்பதாக நகர பொலீஸ் அதிபர் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்துப் போராட்டத்தை முறியடித்த பிரதமரின் அரசின் மீது ஒரு ஜனநாயக இயக்கம் வழக்குப் போட்டிருக்கிறது.  

சாள்ஸ் ஜெ. போமன்