ரஷ்ய – உக்ரேன் போர்ப்பறையின் ஒலி எகிப்தில் “ரொட்டியின் நிலைமை என்னாகும்?” என ஒலிக்கிறது.
ஒரிரு மாதங்களாக இழுபறியில் இருந்துவரும் ரஷ்ய – உக்ரேன் அரசியல் நிலபரம் ஐரோப்பாவை மட்டுமன்றி, உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறு வித கேள்விகளை எழுப்பி வருகின்றன. அவற்றில் முக்கிய நாடொன்று எகிப்து. நாட்டு மக்களின் அடிப்படை உணவான ரொட்டிக்கான கோதுமை மா இறக்குமதிக்கு 85 % ரஷ்யாவையும், உக்ரேனையும் தங்கியிருக்கும் நாடு எகிப்து ஆகும்.
உலகில் கோதுமை மா ஏற்றுமதியில் உக்ரேனும், ரஷ்யாவும் முன்னிலையில் இருக்கின்றன. எகிப்தோ உலகில் கோதுமை மா இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த நாடுகளுக்குள் போர் ஏற்படுமானால் எகிப்துக்குத் தேவையான கோதுமை மா கிடைக்காமல் போகலாம்.
நிலைமை எகிப்திய அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. வேகமாகச் செயற்பட்டு எதிர்காலத்தில் வெவ்வேறு நாடுகளிலிருந்து தமக்குத் தேவையான கோதுமையை இறக்குமதி செய்ய ஒழுங்கு செய்து வருகிறது எகிப்து. கடந்த வாரம் ருமேனியாவிடமிருந்து 180, 000 தொன் கோதுமையை வாங்கும் ஒப்பந்தத்தை எகிப்து செய்துகொண்டது.
ரொட்டிக்குத் தட்டுப்பாடோ, விலையோ எது மாறினாலும் அது எகிப்திய அரசியலில் பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் எனற அனுபவம் அரசுக்கு உண்டு. எகிப்தின் 60 % மக்களுக்கு ரொட்டி மான்ய விலையிலேயே கொடுக்கப்படுகிறது. அரசு அதற்காக வருடாவருடம் செலவிடும் தொகை 3.2 பில்லியன் டொலராகும். மான்யத்தின் அளவைக் குறைக்கவோ, ரொட்டியின் விலையைக் கூட்டவோ எகிப்திய அரசு கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகளெல்லாம் நாட்டில் கலவரங்களையே உண்டாக்கின. 1977 ம் ஆண்டு உண்டான ரொட்டிக் கலவரத்தில் 70 பேர் உயிரிழந்தார்கள்.
உலகச் சந்தையில் சமீப காலத்தில் வேகமாக ஏறிவரும் அடிப்படைப் பொருட்களின் விலையேற்றம் விரைவில் எகிப்தில் ரொட்டிக்கான மான்யம் குறைக்கப்படலாம் என்ற வதந்தியை அடிக்கடி எழுப்பி வருகிறது. ஆனாலும், பெரும்பாலானோர் அரசு ரொட்டியின் விலையை ஏற்றாது என்றே நம்பிவருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்