சட்டத்துக்கு விரோதமாக சிறீலங்காவுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் குப்பைகள் முற்றாகத் திருப்பியனுப்பப்பட்டன.

சட்டப்படி நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாத குப்பைகளைப் பொய்யான உள்ளடக்க விபரங்களுடன் சிறீலங்காவுக்கு அனுப்பியிருந்தது ஐக்கிய ராச்சியம். மொத்தமாக 263 கொள்கலன்கள் கொண்ட அவற்றின் கடைசிப் பாகமான 45 கொள்கலன்கள் திங்களன்று கொழும்பின் துறைமுகத்திலிருந்து பிரிட்டனுக்குத் திருப்பியனுப்பப்பட்டன. 

2017 – 2019 காலகட்டத்தில் சிறீலங்காவுக்குள் அவை “பாவிக்கப்பட்ட மெத்தைகள், தரைவிரிப்புக்கள்” என்ற விபரங்களுடன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. ஆனால், அவைகளுக்குள் மருத்துவ குப்பைகள், இறந்துபோனவர்களின் உடலுறுப்புக்கள் உட்பட்ட சூழலை மாசுபடுத்தும் நச்சுப் பொருட்கள் இருந்ததை சிறீலங்காவின் துறைமுக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குளிர்பதனப்படுத்தப்படாத அக்குப்பைக் கொள்கலன்கள் பெரும் நாற்றம் வீசின.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சமீபத்தில் சிறீலங்கா போன்றே சுபீட்சமான நாடுகளிலிருந்து சூழலைப் பாதிக்கும் குப்பைகளை இறக்குமதி செய்ய மறுக்கும் சட்டங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அதையும் மீறிப் பொய்யான விபரங்களுடன் துறைமுகத்துக்கு வருபவைகளைத் திருப்பியனுப்பியும் வருகின்றன.

சிறீலங்காவால் ஐக்கிய ராச்சியத்துக்குத் திருப்பியனுப்பட்டப்பட்ட குப்பைகள் பற்றி 2019 இல் சிறீலங்கா ஆராய்ச்சி செய்ததில் அவை இந்தியா, டுபாய் ஆகிய நாடுகளுக்கு மீண்டும் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்