“லண்டன்கிராட்” கட்டடங்களின் உரிமையாளர்கள் எவரெவரென்பதை அடையாளம் காணப்போகிறது பிரிட்டன்.
நீண்ட காலமாகவே ஐக்கிய ராச்சியத்தின் தலைநகர் அதிபணக்கார ரஷ்யர்களுக்கும், ரஷ்யத் தலைமைக்கு நெருக்கமான பெரும்புள்ளிகளுக்கும் சொர்க்கலோகமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த உயர்வர்க்கத்தின் பணம் மிகப்பெருமளவில் லண்டனின் முதலீடுகளாக இருந்ததாலும்கூட லண்டன்கிராட் என்ற பெயரால் லண்டன் நகரம் குறிப்பிடப்படுவதுண்டு. நைட்பிரிட்ஜ், செல்ஸி பகுதிகளில் பெரும்பாலான கட்டடங்கள் ரஷ்யப் பணக்காரர்களின் சொத்தாகியிருக்கிறது.
லண்டனில் பிரபல மற்றும் பொருளாதார மதிப்பு உயர்ந்த கட்டடங்களை ரஷ்ய அரசுக்கு நெருங்கியவர்கள் தாம் நாட்டில் சுரண்டிய பணத்தால் பினாமிகள் மூலமும் சொந்தப்படுத்தியிருக்கிறார்கள். சுமார் 1.5 பில்லியன் பவுண்ட் பெறுமதியான கட்டடங்கள் அப்படிப்பட்ட உரிமையாளர்களால் அங்கே கையகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. ஐக்கிய ராச்சியம் “தங்க விசா” என்ற பெயரில் அந்த நாட்டில் பெரும் முதலீடு செய்பவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கி வந்தது. அந்த வர்க்கத்தின் பணபலம் ஐக்கிய ராச்சியத்தின் ஆளும் வர்க்கத்தையும் கைக்குள் போட்டுக்கொண்டிருந்ததால் அவர்கள் அங்கே செய்யும் நிழல் குற்றங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
இவைபற்றிச் சமீப வருடங்களில் ஐக்கிய ராச்சியத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. 2006 இலும் 2018 இலும் ரஷ்ய அரசு தனது கையாட்கள் மூலம் தமக்கு வேண்டாதவர்களை லண்டனில் வைத்து நஞ்சூட்டிக் கொலைசெய்யும் முயற்சிகள் செய்தமை வெளியாகிய பின்னர் இப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்து இரண்டு நாடுகளுக்குமிடையிலான ராஜதந்திர உறவுகளை பிளக்க ஆரம்பித்திருந்தது. 2020 இல் ஐக்கிய ராச்சியத்தின் அரச ஆராய்ச்சி அறிக்கையொன்று அந்த நாட்டின் அரசியல் முடிவுகளிலும், தொழில்துறையிலும் ரஷ்யர்கள் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பலமுள்ளவர்களாக வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமையன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கும் மசோதாவொன்று ஐக்கிய ராச்சியத்தில் கட்டடங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் எவரெவரென்பதைக் கட்டாயமாக வெளிப்படுத்தவேண்டும் என்று கோரவிருக்கிறது.
“எங்கள் சமூகத்தின் நல்லெண்ணத்தையும், விருந்தோம்பலையும் பலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். பினாமி நிறுவனங்களின் பெயர்களின் பின்னால் இருக்கும் நபர் யாரென்பதை வெளிப்படுத்தும்படி அரசு கோரும்போது அது ரஷ்ய ஆளும் வர்க்கத்தினரைக் கட்டாயமாகத் தாக்கும்,” என்கிறார் தொழில்துறை அமைச்சர் கிவாசி கிவார்ட்டங்.
சாள்ஸ் ஜெ. போமன்