அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வராமலிருப்பதற்காகத் தனது படகு விற்பனையை நிறுத்தியது பிரெஞ்ச் நிறுவனம்.

பிரான்ஸின் வடக்கிலிருக்கும் Calais, Grande-Synthe ஆகிய நகரங்களில் தனது கடைகளில் இனிமேல் படகுகளை விற்பதில்லையென்று முடிவெடுத்திருக்கிறது Decathlon நிறுவனம். அந்த நகரங்களிலிருந்து அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழையாமலிருக்கவே அந்த நிறுவனம் குறிப்பிட்ட முடிவை எடுத்திருக்கிறது.

வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் அகதிகள் சமீப காலத்தில் அக்கால்வாயினூடாக பிரிட்டனை அடைந்திருக்கிறார்கள். அவர்களைத் தடுப்பதற்கு பிரான்ஸ் உதவவேண்டும் என்ற ஒப்பந்தத்திலிருக்கும் ஐக்கிய ராச்சியத்துடன் அதனால் மனக்கசப்பு வளர்ந்து வருகிறது. தமது நாடுகளுக்கிடையே ஏற்பட்டுவரும் பிளவை வளர்க்க உதவலாகாது என்பதாலேயே Decathlon மட்டுமன்றி படகுகளை விற்கும் வேறு நிறுவனங்களும் அதே முடிவை எடுத்திருக்கின்றன. 

2018 இல் அக்கால்வாய் வழியாக பிரிட்டனை எட்டியவர்கள் எண்ணிக்கை 800 ஆக இருந்தது. 2020 இல் அது 9,500 ஆகப் பெருகி, கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 15,400 பேர் அவ்வழியைப் படகால் கடந்திருக்கிறார்கள். நவம்பர் 16 ம் திகதியன்று மட்டுமே 1,185 பேர் படகால் அக்கால்வாயைக் கடந்து பிரிட்டனை எட்டியதாகப் பிரிட்டனின் விபரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரான்ஸ் அவர்களைத் தடுக்காமல் விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய ராச்சியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் வட எல்லை நகரங்களில் அனுமதியில்லாமலே அகதிகள் குடில்கள் அமைத்து வாழ்கிறார்கள். அவர்கள் பிரான்ஸில் அகதிகளாகப் பதிந்துகொள்ளாமல் ஐக்கிய ராச்சியத்துக்குள் பிரவேசிப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான முகாம்களை பிரான்ஸ் அவ்வப்போது கலைத்தாலும் அங்கே குவியும் அகதிகள் மீண்டும் குடில்களை அமைத்துக்கொள்கிறார்கள்.

Grande-Synthe நகரிலிருக்கும் அனுமதியற்ற அகதிகள் முகாமை பிரான்ஸ் கடந்த நாட்களில் நீக்கியிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்