பிரான்ஸில் பாடசாலைகளை திறப்பதைதாமதப்படுத்துமாறு பெற்றோர்கள் மனு!

புதிய தவணைக்காகப் பாடசாலைகளைத் திறப்பதை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.பள்ளி விடுமுறை மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங் களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் மீள் எழுச்சி கொள்ளக் கூடும் என்ற அச்சத்தினால் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் வேகமாகப் பரவிவரும் மரபு மாற்றமடைந்த வைரஸ் அதிகம் இளவயதினரிடையே தொற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அங்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லண்டனில் ஆரம்பப் பாடசாலைகள் அனைத்தையும் மேலும் இரு வாரங்களுக்கு மூடுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் சகல பாடசாலைகளையும் மூடவேண்டும் என்று அங்குள்ள ஆசிரிய தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.பாடசாலைகள் மீளத் தொடங்குவதற்கு இன்னும் ஒருநாள் இருக்கும் நிலையில் பிரான்ஸிலும் அதுபோன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பிரான்ஸில் நத்தார் விடுமுறைக்குப் பின் இரண்டாம் தவணைக்காகப் பாடசாலைகள் அனைத்தும் நாளை மறுதினம் 4ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளன.இருவார கால விடுமுறைக்குப் பிறகு வைரஸ் வீரியமாகப் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்படுவதால் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதைத் தாமதமாதப்படுத்துமாறு தொற்று நோயியலாளர்களும் பெற்றோர்களும் வேண்டுகோள்களை விடுத்துள்ளனர்.

பெற்றோர்களது சார்பில் அரசிடம் வழங்கப்பட்டிருக்கும் பகிரங்கக் கடிதம் ஒன்றில், சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்குப் பாடசாலைகளைத் தொடர்ந்து மூடிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.பாடசாலைகளில் மாணவர் மத்தியில் தொற்றை அனுமதிப்பது முழு சமூகத்துக்கும் வைரஸ் பரவுவதை அனுமதிப்பதற்கு ஒப்பானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வேகமாகப் பரவும் புதிய வைரஸ் பிரான்ஸின் எல்லைப் பரப்பினுள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால்பாடசாலைகள் விடயத்தில் அதிக முன்னெச்சரிக்கை அவசியம் என்று பெற்றோர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.போலந்து, நெதர்லாந்து, கிறீஸ், ஒஸ்ரியா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்று பாடசாலைகளை மூடும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *