ஒரு பகுதி வான்கூவர் நகரமும் அதன் துறைமுகமும் வெள்ளப்பெருக்கால் சுற்றியுள்ள உலகிலிருந்து வெட்டப்பட்டிருக்கின்றன.

கனடாவின் ஒரு பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியா மழைவெள்ளத்தின் விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மண்சரிவுகளும், மழைவெள்ளமும் சேர்ந்து ஏற்படுத்திய பாதிப்புக்களால் ஒருவர் இறந்திருக்கிறார், மேலும் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். 

சில முக்கிய போக்குவரத்து வீதிகளும், ரயில் பாதைகளும் வெள்ளத்தால் மூடப்பட்டு விட்டதால் முக்கிய நகரமான வான்கூவரும், துறைமுகமும் வெளியுலகத்திலிருந்து வெட்டிவிடப்பட்டிருக்கின்றன. வான்கூவர் துறைமுகம் கனடாவின் முக்கிய, மிகப்பெரிய துறைமுகம் என்பதால் நாட்டின் மற்றைய பாகங்களுக்கு அங்கிருந்து பொருட்களை எடுத்துச் செல்வது தடைப்பட்டிருக்கிறது.

பல நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழையால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியம் மட்டுமன்றி, அமெரிக்காவின் வடமேற்குப் பாகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பிராந்தியங்களிலும் வீதிகளில் பிரயாணித்த பலர் வாகனங்களுடன் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் மீட்பு ஹெலிகொப்டர்கள் மூலம் காப்பாற்றப்பட்டார்கள். அச்சமயத்திலேயே ஒரு இறப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவும், வான்கூவரும் கடந்து போன கோடை காலத்தில் கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு 500 க்கும் அதிகமானோர் அதனால் இறந்திருந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்