வெள்ளப்பெருக்கால் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்ரேலியாவில் தமது வீடுகளிலிருந்து வெளியேறினார்கள்.

நீயூ ஸவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாண்ட் ஆகிய மாநிலங்களில் வெளுத்துக்கட்டும் மழையினாலும், எல்லைகளைப் பிய்த்துக்கொண்டு ஓடும் அணைக்கட்டு வெள்ளங்களினாலும் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். மீட்புப் படையினரும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட பலரை அங்கிருந்து அகற்றி வருகிறார்கள்.

குறிப்பிட்ட அந்த மாநிலங்களின் கரையோரங்களில் சுமார் நாலு மாதங்களில் பெய்யும் மழை இரண்டு, மூன்று நாட்களில் கொட்டியிருக்கிறது. இது போன்ற மழை நூறு வருடங்களிலொருமுறை தான் இப்பகுதிகளில் கொட்டுவதுண்டு. “பல பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம் எல்லாமே தடைப்பட்டு, வீதிகள், பாலங்கள் உடைந்திருக்கும் இச்சமயத்தில் எங்கள் முக்கிய குறி முடிந்தளவு மனித உயிர்களைக் காப்பாற்றுவதேயாகும்,” என்கிறார் நியூ சவூத் வேல்ஸ் மாநில முதலமைச்சர்.

இரண்டு மாநிலங்களிலும் ஆங்காங்கே வீடுகளுக்குள் மாட்டிக்கொண்டவர்களைக் காப்பாற்ற மீட்புப் படையினர் படகுகளில் சென்று கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள். வானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் கூரைகளிழிழந்த வீடுகளும், பண்ணைகளின் குதிரை, பசுக்கள், மற்றும் வீட்டுச் செல்ல மிருகங்களும் வெள்ளத்திலிருந்து தப்ப முயல்வதைக் காண முடிகிறது. 

ஆஸ்ரேலியாவின் தென்கிழக்குக் கரையோரங்களில் மழை தொடர்ந்தும் வரும் நாட்களில் அடித்துப் பெய்யப் போகிறது என்று வாநிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. சிட்னியைச் சுற்றிவர உள்ள இடங்களில் நீர் மட்டம் சாதாரணமானதை விட 15 மீற்றர் அதிக உயரத்தை எட்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.

தற்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுவரும் இதே பகுதி மக்கள் 2019 இல் வரட்சியாலும், காட்டுத் தீயாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *