நிதிவருடம் 2022 இல் நாட்டின் பாதுகாப்புச் செலவு 7.1 % ஆல் அதிகரிக்கப்படும் என்கிறது சீனா.
சமீப வருடங்களின் தனது உள் நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பு அரண்களை நவீனப்படுத்தி வரும் உலக நாடுகளில் சீனா முக்கியமானது. பாதுகாப்புக்காக உலகில் அதிகம் செலவிடும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்திலிருக்கிறது சீனா. 230 பில்லியன் டொலரைப் பாதுகாப்புக்காக ஒதுக்கும் சீனா கடந்த வருடத்தில் அதை 6.8 % அதிகரித்திருந்தது.
சமீப வருடங்களில் சீனா தனது நாட்டை அடுத்துள்ள பிராந்தியங்களில் தனக்கு உரிமையானதென்று குறிப்பிட்டு மேலும், அதிக பகுதிகளில் தனது இராணுவத் தளங்களை நிறுவி வருகிறது. சர்வதேசச் சட்டப்படி அப்பகுதிகளில் நீண்ட காலமாக வளங்களைப் பாவித்து வந்த பக்கத்து நாடுகள் எரிச்சலடைந்துள்ளன. முக்கியமாகத் தென் சீனக் கடல் பிராந்தியம் முழுவதுமே தனக்கானது என்று பிரகடனம் செய்துவரும் சீனாவை எதிர்கொள்ள அப்பகுதிகளில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்திருக்கின்றன.
தற்சமயம் சீனாவில் நடந்துகொண்டிருக்கும் வருடாந்தர பாராளுமன்றக் கூட்டங்களில் இவ்வருட வரவுசெலவுத் திட்டம் உட்பட அரசின் அபிவிருத்தி எண்ணங்களைப் பாராளுமன்ற முதல்வர் லீ கேஷியாங் முன்வைத்து உரை நிகழ்த்தியிருக்கிறார். நாட்டின் வருடாந்தரப் பொருளாதார தயாரிப்பானது 5.5 % விகிதத்தால் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதையும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் பிராந்தியத்தில் அன்னிய நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் அதை எதிர்கொள்ள நாடு தனது பாதுகாப்பை நவீனப்படுத்தவேண்டும் என்று பாதுகாப்புச் செலவு அதிகரிப்புக்கான காரணம் தெரிவிக்கப்பட்டது. 7.1 விகிதத்தால் பாதுகாப்புச் செலவு அதிகப்படுத்துவது அதிகாரபூர்வமான கணக்காக இருப்பினும் நிஜத்தில் சீன அரசு அதைவிட அதிகமான தொகையையே அந்த நோக்கத்துக்காகச் செலவிடும் என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்