ரஷ்ய வங்கிகள் மீதான “சுவிப்ட்” கட்டுப்பாடு ஏழு ரஷ்ய வங்கிகளை மட்டுமே தாக்குகிறது.

ரஷ்ய வங்கிகள் மீது கடந்த வாரத்தில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளால் போடப்பட்டிருக்கும் swift பாவனைக் கட்டுப்பாடு உள்ளடக்கிய கட்டுப்பாடுகள், விபரிக்கப்படுவது போலப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையல்ல என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. காரணம் அவை ஏழு ரஷ்ய வங்கிகளை மட்டுமே சுவிப்ட் பாவனையிலிருந்து விலக்கியிருக்கின்றன. ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான வங்கிகள் இயங்கி வருகின்றன என்பதால் இக்கட்டுப்பாடுகள் பெருமளவு ரஷ்யப் பொருளாதாரத்தைப் பாதிக்கப்போவதில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அந்த விமர்சகர்கள். 

மார்ச் 12 ம் திகதி முதல் இயக்கத்துக்கு வரவிருக்கும் சுவிப்ட் இயக்கப் பாவிப்புத் தடை ஏற்றுமதி, இறக்குமதிக்கு அதிமுக்கியமானதாகும். இறக்குமதி/ஏற்றுமதி செய்யும் நிறுவனத்துக்கும் ஏற்றுமதி/இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கும் இடையே சுவிப்ட் அடையாளக்கணக்கு அவசியம். அது இல்லாவிடில் பணமாற்றம் செய்துகொள்ள முடியாத நிலைமை உண்டாவதால் எவரும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய முன்வரமாட்டார்கள் எனபதாலேயே அந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் ஐரோப்பிய நாடுகள் தமது வர்த்தகக் கொடுக்கல் வாங்கலில் பாவிக்கும் காஸ்புரோம் வங்கி மீது சுவிப்ட் தடை போடப்படவில்லை. எனவே ஜேர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து எரிவாயுக் கொள்வனவுக்கான பணம் தொடர்ந்தும் ரஷ்யாவின் அரசுக்குக் கிடைக்கவிருக்கிறது. 

ஆயினும், மொஸ்கோவின் பங்குச்சந்தையைத் திறக்காமல் தொடர்ந்தும் ரஷ்யா மூடிவைத்திருக்கிறது. அந்த அளவுக்குத் தடைகள் ரஷ்யப் பொருளாதாரத்தை அதிரவைத்திருக்கின்றன. அதன் காரணம் ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் தூளாக்கும் மேலும் அதிக கட்டுப்பாடுகள் வருகின்றன என்று ரஷ்யர்கள் கலங்கிப் போயிருப்பதே ஆகும் என்கிறார்கள் விமர்சகர்கள். ஒரேயடியாக, சகல ரஷ்ய வங்கிகள் மீதும் ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகள் தடைகளை விதித்திருக்குமானால் அவை ரஷ்ய வர்த்தகம், பொருளாதாரம் போன்றவையை உண்மையிலேயே தவிடுபொடியாக்கும் வல்லமை பொருந்தியவையாக இருக்கும் என்பதே அவர்களின் முக்கிய விமர்சனமாகும்.

மேலும் அதிகமான ரஷ்ய வங்கிகள், ரஷ்யப் பெரும் செல்வந்தர்கள், ரஷ்யக் கப்பல்களை ஐரோப்பிய, அமெரிக்கத் துறைமுகங்களில் தடை செய்தல் போன்ற மேலும் பல தடைகள் பற்றிய திட்டங்கள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்