உக்ரேனுக்காகப் போரில் பங்கெடுக்க ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள “சர்வதேசத்தினரும் பங்கெடுக்குப் பிராந்தியப் படை” ஒன்றை ஆரம்பித்து உக்ரேன் சார்பில் போரிட வரும்படி ஜனாதிபதி செலின்ஸ்கி ஒரு வாரத்துக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையடுத்துச் சமூக வலைத்தளங்களிலும், வெளிநாடுகளிலிருக்கும் உக்ரேனியத் தூதுவலாயங்களிலும் பல வெளிநாட்டினர் உக்ரேனுக்காகப் போரிட விரும்பம் தெரிவித்து வருவதாகப் பல செய்திகள் குறிப்பிடுகின்றன.   

கடந்த வாரத்தில் லத்வியா பாராளுமன்றம் தனது நாட்டினர் உக்ரேனுக்குச் சென்று அந்த நாட்டுக்காகப் போரிடுவதை அனுமதித்தது. எஸ்தோனியப் பாராளுமன்றத்திலும் அதற்கான ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. டென்மார்க்கின் பிரதமர் மெத்த பிரடெரிக்சன் தனது நாட்டு மக்கள் “சர்வதேச இராணுவமொன்றுடன் இணைந்து உக்ரேன் சார்பில் போரிடுவதை அரசு தடுக்காது,” என்று குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய ராச்சியத்திலும் அக்கேள்வி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படுகிறது.

பிரான்ஸிலும் பலர் உக்ரேனுக்குச் சென்று போரிட விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஓரிரு டசின் பேர் ஏற்கனவே பிரான்ஸிலிருந்து அங்கே போருக்காகச் சென்றிருக்கிறார்கள். அதேபோலவே ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, கனடா நாட்டிலிருந்தும் உக்ரேனுக்குப் போயிருப்பதாகத் தெரியவருகிறது.

 சமூக வலைத்தளத்தில் அப்போரில் பங்கெடுக்க விரும்புபவர்களைக் கொண்ட சில பக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் சில ஆயிரம் பேராவது ஆயுதப் போரில் உக்ரேனுக்காகப் பங்கெடுக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விண்ணப்பப்படிவங்களை நிரப்பும்படி கோரப்பட்டிருக்கிறார்கள். விண்ணப்பதாரிகள் ஓரளவு இராணுவப்போர்ப் பயிற்சி உள்ளவர்களாகவும், ஏற்கனவே குற்றங்களில் ஈடுபட்டிராதவர்களாகவும் இருக்கவேண்டுமென்றும் கோரப்படுகிறது.

உக்ரேன் போரில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தவர்களில் பலரும் உக்ரேன் பற்றி ஏற்கனவே பெருமளவில் அறியாதவர்கள் என்று அப்படிப்பட்டவர்களிடையே நடாத்தப்பட்ட நேர்முக விசாரணைகள் மூலம் தெரியவருகிறது. ஒரு சாரார் உக்ரேன் என்ற நாடு இருப்பதையே போர் ஆரம்பித்த பின்னர் தான் அறிந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்