ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா.
மேற்கு நாடுகளின் அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா. உலகில் எரி நெய் கொள்வனவு செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடான இந்தியா தனது தேவைக்கான எரிநெய்யில் 85 % க்கு இறக்குமதியிலேயே தங்கியிருக்கிறது.
ஈராக், எமிரேட்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே இந்தியாவுக்குப் பெருமளவில் எரிநெய்யை விற்கும் நாடுகளாக இருந்து வருகின்றன. ரஷ்யா குறைந்த விலையில் இந்தியாவுக்கு எரிநெய் விற்கத் தயாராக இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் இவ்வார ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டிருந்தார்.
‘இரண்டு வருடங்கள் கொரோனாக் கட்டுப்பாடுகளால் பலவீனமடைந்திருக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விடலாகாது,’ என்று இந்தியாவின் நடவடிக்கைக்குக் காரணம் தெரிவித்திருந்தார் அமைச்சர். அத்துடன் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கும்போது இந்தியா அதைச் செய்வதை எவரும் தடுக்க முடியாதென்றும் இந்திய அரசு தெரிவிக்கிறது.
இன்று இந்தியா வெளியிட்டிருக்கும் அதிகாரபூர்வமான செய்திகளின்படி சுமார் சர்வதேச விலையிலிருந்து சுமார் 20 -25 டொலர்கள் மலிவு விலையில் 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியிருக்கிறது. மேலும் அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து அதைக் கொள்வனவு செய்ய இந்தியா தயாராகிறது என்றும் இந்தியாவின் அரச செய்திகள் குறிப்பிடுகின்றன.
தற்போதைய நிலையில் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி கொள்வனவு செய்வதற்கு எதிரான தடைகள் எதுவும் இல்லை. அமெரிக்காவும், ஜப்பானும், ஐக்கிய ராச்சியமும் சேர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டாமென்று இந்தியாவிடம் கேட்டிருந்தன. எதிர்காலச் சரித்திரத்தில் அது இந்தியாவின் நடத்தையின் தவறைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று அந்த நாடுகள் எச்சரித்திருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்