போர் காரணமாக உக்ரேனின் சுமார் 40 விகிதமான விவசாய நிலங்கள் பாவிப்புக்கு உதவாததாகியிருக்கிறது.

தானியங்களை உற்பத்தி செய்வதிலும், உலகெங்கும் ஏற்றுமதி செய்வதிலும் முக்கியமான ஒரு நாடாக விளங்கி வந்தது உக்ரேன். அந்த நாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை, “ஐரோப்பாவின் தானியக்கிடங்கு,” என்று ஐரோப்பியப் பாடசாலைப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. உலகிலிருக்கும் அதிக ஊட்டமுள்ள நிலப்பிரதேசங்கள் சில உக்ரேனில் இருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமன்றி உலகின் வேறு பல நாடுகளுக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் உக்ரேனின் விவசாய நிலங்கள் பல போரினால் பாவிக்க முடியாமல் போய்விட்டன. ஒரு பகுதி நிலங்களில் கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. மேலுமொரு பகுதி இராணுவத்தின் பாவிப்புக்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளில் பலர் போரில் ஈடுபடவும் போயிருப்பதால் நாட்டின் விவசாய உற்பத்தித் திறனும் குறைந்திருக்கிறது. 

நாட்டின் விவசாய நிலங்களில் 40 % க்கும் அதிகமானவை தற்சமயம் பாவனைக்கு உதவாமல் போயிருப்பதாக உக்ரேன் விவசாயிகள் சங்கம் குறிப்பிடுகிறது. வேகமாக நடவடிக்கைகள் எடுத்துப் பாவிக்கப்படும் நிலங்களில் விவசாயத்தில் தொடர்ந்தும் ஈடுபடுகிறவர்கள் தமது உற்பத்தியை அதிகரிக்காத பட்சத்தில் நாட்டுக்குத் தேவையான உணவைப் பெறுவதே கேள்விக்குறியாகிவிடும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்த நிலைமையின் விளைவாகவும், உக்ரேனின் போக்குவரத்து வலை சீர்குலைந்திருப்பதாலும் ஏற்றுமதி செய்வது என்பது நடக்காத காரியம் என்கிறது உக்ரேன். பக்க விளைவாக உலகின் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதுடன் பெரும் தட்டுப்பாடும் ஏற்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *