ரோஹின்யா இனத்தவரைக் குறி வைத்து அழிப்பதில் மியான்மார் ஈடுபட்டதாக அமெரிக்க பிரகடனம் .
மியான்மார் அரசு தனது நாட்டில் வாழும் ரோஹின்யா மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகள் மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று பிரகடனம் செய்திருக்கிறார். அமெரிக்காவின் யூத அழிப்பு அருங்காட்சியகத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ரோஹின்யா மக்கள் பற்றிய கண்காட்சியில் அமெரிக்க அரசின் அந்த நிலைப்பாட்டை அவர் அறிவித்தார்.
2017 இல் மியான்மார் இராணுவம் அச்சமயத்து அரசின் ஆசீர்வாதத்துடன் நாட்டின் ரோஹின்யா இன மக்கள் மீது குறிபார்த்துத் தனது வன்முறைகளை அவிழ்த்துவிட்டது. பல கிராமங்கள் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கானோ அவைகளிலிருந்து விரட்டப்பட்டார்கள். அவைகள் பற்றிய விபரங்களை அமெரிக்க அரச அதிகாரிகளும், மனித உரிமை அமைப்புக்களும் திரட்டி மியான்மார் அரசு மனித இனத்துக்கெதிரான குற்றங்களைச் செய்தது என்று பிரகடனப்படுத்த அச்சமயத்தில் முற்பட்டார்கள். ஆனால், டொனால்ட் டிரம்ப்பின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மைப் பொம்பியோ அதைத் தடுத்துவிட்டார்.
மியான்மார் இராணுவமும், புத்தபிக்குகளில் ஒரு சாராரும் சேர்ந்து ரோஹின்யா இன மக்களைக் கொன்றும், சித்திரவதை செய்தும், கற்பழிப்புக்களில் ஈடுபட்டும் மியான்மாரில் அவர்களுக்கு இடமில்லை என்று உணர்த்தினார்கள். சுமார் 730,000 ரோஹின்யா மக்கள் பக்கத்து நாடான பங்களாதேஷுக்குப் போய்ப் புகலிடம் தேடியிருக்கிறார்கள். மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளுக்கும் தப்பியோடி வாழ்ந்து வருகிறார்கள்.
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் வெளிவிவகார அமைச்சரான அண்டனி பிளிங்கன் தனது அதிகாரிகளிடம் மியான்மார் இராணுவத்தின் அக்கிரமங்களைப் பற்றிய சாட்சிகளையும், ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஒன்றுபடுத்தும்படி கோரியிருந்தார். அவற்றை வெளிப்படுத்தி மியான்மாரின் தற்போதைய இராணுவ அரசை அதற்கான பொறுப்பேற்கவைத்துச் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவேண்டும் என்று அவர் திட்டமிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்