சவூதி அரேபியா நீண்ட காலமாகக் கோரிவந்த பட்ரியோட் ஏவுகணை மறிப்புக் கலங்களைக் கொடுத்தது அமெரிக்கா.

டொனால்ட் டிரம்ப் அரசுடன் நெருங்கிய உறவுகொண்டு தமக்குத் தேவையான பெரும்பான்மையான இராணுவ ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டுவந்த நாடு சவூதி அரேபியா. ஜோ பைடன் பதவியேற்றதும் அவ்வுறவில் விரிசல் ஏற்பட்டது, ஆயுத விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. ஹூத்தி இயக்கத்தினரின் ஏவுகணைகளால் தாக்கப்பட்டு வந்த சவூதி அரேபியா ஒரு வழியாக அவற்றைத் தடுக்கும் ஆயுதமான பட்ரியோட் ஏவுகணை மறிப்புக் கலங்களை அமெரிக்காவிடமிருந்து மீண்டும் பெற ஆரம்பித்திருக்கிறது.

ரஷ்யா – உக்ரேனுக்கு இடையேயான போரால் ஏற்பட்டிருக்கும் பக்க விளைவுகள் மீண்டும் வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்குச் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. ரஷ்யாவின் எரிபொருளை வாங்காமல் மாற்றுத் தேடும் ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் சவூதி அரேபியாவையும் நாடியிருக்கிறார்கள்.

ஈரான் பின்னணியுள்ள ஹூத்தி இயக்கத்தினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள பட்ரியோட் ஏவுகணை மறிப்புக் கலங்களை அமெரிக்கா கடந்த வாரங்களில் மீண்டும் சவூதி அரேபியாவுக்கு அனுப்பியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. 

தனது எரிநெய் உறிஞ்சல் அளவை உயர்த்தப்போவதில்லை என்று சுமார் ஒரு வருடத்துக்கும் அதிகமாக மறுத்து வந்த சவூதி அரேபியா ஓரிரு தினங்களுக்கு முன்னர் அத்துறையில் மிகப்பெரிய இலாபத்தைச் சம்பாதித்திருப்பதாக அறிவித்திருந்தது. அத்துடன் அத்துறையிலான முதலீடுகளை 50 % விகிதத்தால் உயர்த்துவதாகவும் அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *