கரீபியத் தீவுகளில் பிரிட்டிஷ் அரசகுடும்பத்தினர் மீதான கோபத்தின் விளைவுகள் தொடர்கின்றன.
1962 இல் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திலிருந்து விடுவித்துக்கொண்டு சுதந்திரம் பெற்ற நாடு ஜமேக்கா. தனது 60 சுதந்திரதினத்தை இவ்வருடம் கொண்டாடவிருக்கும் ஜமேக்காவில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II இன் 70 முடிசூட்டு விழாவைக் கொண்டாட வந்திறங்கியிருக்கிறார்கள் இளவரசர் வில்லியமும், மனைவி கேட்டும். அவர்களுக்கு அங்கே உத்தியோகபூர்வமான வரவேற்புக் கிடைத்தாலும் நாட்டினுள் பிரிட்டிஷ் அரசு மீதான வெறுப்பைக் காட்டும் நடவடிக்கைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஜமேக்காவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், அறிவியலாளர்களுமாக 100 பேர் சேர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஒரு பகிரங்கக் கடிதத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிப் பிரசுரித்திருக்கிறார்கள். மகாராணியின் முடிசூடலைக் கொண்டாட எந்தவிதக் காரணமும் தமக்குத் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘மகாராணியின் ஆட்சியிலும் அவருக்கு முன்னைய பிரிட்டிஷ் அரசர்களின் காலத்திலும் சரித்திரம் காணாத அளவு மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டிருக்கின்றன,’ என்று விளக்குகிறது அந்த 100 பேர் வெளியிட்டிருக்கும் கடிதம்.
“உங்கள் பாட்டியின் 70 ஆண்டுகள் அரியணையில் இருந்த காலத்தில் தனக்கு முன்னைய பிரிட்டிஷ் அரசர்கள் செய்த ஆபிரிக்கர்களின் கடத்தல், அடிமைப்படுத்தல், காலனித்துவம் ஆகியவற்றின் விளைவுகளால் எங்கள் முன்னோர்களுக்கு ஏற்படுத்தி பாரதூரமான துன்பங்களை நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்ய எதுவும் செய்யவில்லை,” என்று அக்கடிதம் இளவரசர் வில்லியத்துக்குச் சுட்டிக் காட்டுகிறது.
ஜமேக்காவில் இளவரச தம்பதிகளின் வரவுக்கு எதிரான ஊர்வலங்களும் நடத்தப்பட்டு மேற்கட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டன. பிரிட்டிஷ் அரசு அந்த நாட்டு மக்களின் முன்னோருக்குச் செய்த கொடுமைகளை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டு அதற்கான நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டுமென்ற குரல் ஜமேக்காவில் எழுந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்