ஹரியை அவமானப்படுவதைத் தடுக்க பிலிப்ஸின் இறுதி யாத்திரையில் எவரும் இராணுவ உடை அணியமாட்டார்கள்.

ஒரு வாரத்துக்கு முன்னர் தனது 99 வது வயதில் மறைந்த பிரிட்டிஷ் மகாராணியின் கணவர் பிலிப்ஸின் இறுதி யாத்திரை பற்றிய விபரங்கள் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்சடங்குகள் ஏப்ரல் 19 ம் திகதி பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும்.

விண்ட்சர் அரண்மனையின் பிரத்தியேக தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் உடல் காலை பதினோரு மணிக்கு அங்கிருந்து சடங்குகள் நடக்கும் உள் தோட்டப் பகுதிக்கு மகாராணி Elizabeth II தொடர எடுத்துவரப்படும். 

https://vetrinadai.com/news/prins-philips-99/

இறுதி யாத்திரை நடக்கும் சமயத்தில் பொதுமக்கள் எவரையும் அரண்மனைப் பகுதிக்கு வரவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சடங்குகளும், இறுதி யாத்திரையும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும். 

இறுதி யாத்திரை நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள 30 பேரே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். கொரோனாத் தொற்றுக்களைத் தவிர்க்குமுகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பங்குகொள்பவர்களில் பெரும்பான்மையினர் அரசகுடும்ப அங்கத்துவர்களே. 

பங்குகொள்பவர்கள் எவரும் இராணுவ உடைகள் அணிந்திருக்க மாட்டார்கள். தமது சாதாரண உடைகளிலேயே அவர்கள் பங்குபற்றுவார்கள். அந்த முடிவை மகாராணியே எடுத்ததாகத் தெரிகிறது. அதன் காரணம் இளவரசர் ஹரி அரச குடும்ப உத்தியோகபூர்வமான கடமைகளிலிருந்து விலகியபோது அவரது இராணுவப் பட்டங்கள் பறிக்கப்பட்டன. பலரின் பார்வை ஹரி – மேகன் தம்பதிகள் மீது திரும்புவதைத் தடுக்க மேகன் இறுதிக் காரியங்களில் பங்குகொள்ள வரவில்லை. 

பூதவுடல் காவிக்கொண்டு வரப்படும்போது இளவரசர் சார்ல்ஸ், அவரது மகன்களான வில்லியம், ஹரி ஆகியோருடன் நடந்து வருவார். வில்லியமும், ஹரியும் தமக்குள் நல்லுறவுடன் இல்லாததால் அவர்களிருவரிடையே அவர்களுடைய உறவினரொருவர் சேர்ந்து நடப்பார் என்று தெரியவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *