முடிதரித்துத் தலைமை தாங்கி எழுபது வருடமாகியதைக் கொண்டாடுகிறார் எலிசபெத் II மகாராணி.

1952 ம் ஆண்டு தனது தந்தை ஜோர்ஜ் VI  காலமாகிவிடவே திடீரென்று ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் கிரீடத்தை ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் எலிசபெத். அப்போது அவரது வயது 25 மட்டுமே. ஞாயிறன்று [26.02] அவர் பதவியேற்று 70 வருடமாகியிருப்பது ஐக்கிய ராச்சியத்தில் கொண்டாடப்படுகிறது.

பிரிட்டிஷ் சாம்ராச்சியம் நவீன காலத்திற்கு மாறுவதை முடிசூட்டு விழாவை 1953 ம் ஆண்டில் தொலைக்காட்சியில் காட்டுவதன் மூலம் உலகின் 300 மில்லியன் மக்கள் கண்டு கழித்தனர். இன்று 70 வருடம் ஆட்சிக்கட்டிலில் இருப்பதன் மூலம் அவர் உலகில் எந்த ஒரு அரசத் தலைவரும் அதைச் செய்யவில்லை என்பதன் மூலம் சாதித்திருக்கிறார்.

சேர் வின்ஸ்டன் சேர்ச்சில் முதல் இதுவரை 14 பிரதமர்களைச் சந்தித்திருக்கும் எலிசபெத் மகாராணியின் வயது 96 ஆகும். தொடர்ந்தும் உத்தியோகபூர்வமாகக் கடமையாற்றி வரும் அவர் சமீப வருடங்களில் தனது உடல் ஆரோக்கியம் பலவீனமான நிலையிலிருக்கிறார். அத்துடன் கொரோனாத் தொற்றுக் காலமும் சேர்ந்து அவர் பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளை ஒதுக்கித்தள்ள வேண்டிய நிலைமைக்கு உட்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் தனது கணவர் பிலிப் 100 வருடம் நிறைய ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இறந்ததால் மகாராணியின் மனது கவலையால் வாடியிருக்கிறது என்று பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பிலிப்புக்கும் எலிசபெத் மகாராணிக்கும் நான்கு பிள்ளைகள், எட்டுப் பேரப்பிள்ளகள் அவர்களுக்கு உண்டு. அவருடைய பெற்றோருடைய காலத்தில் இல்லாத அளவுக்குத் தனது வாழ்க்கைக் காலத்தில் அரச குடும்பத்தினுள் பல விவாகரத்துக்கள், மன முறிவுகள், வதந்திகள் ஆகியவற்றை மகாராணி எலிசபெத் சந்தித்திருக்கிறார்.

எலிசபெத்தின் பின்னர் முடிதரிக்கவிருப்பவர் அவர்களுடைய மகன் 73 வயதான சாள்ஸ் ஆகும். அவருடைய முடிசூட்டு விழாவுக்குத் தயார் செய்யும்படி அரண்மனை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், இரகசியப் பொலீசார் ஆகியோருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

சார்ள்ஸின் மனைவி கமில்லாவை மகாராணியாக அச்சமயத்தில் பிரகடனம் செய்யவேண்டுமென்று மகாராணி எலிசபெத் விருப்பம் தெரிவித்திருக்கிறார். 

70 வருடங்களாக அரணிலிருக்கும் மகாராணியின் கொண்டாட்டங்கள் சம்பந்தமாகப் பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. முக்கிய கொண்டாட்டங்கல் ஜுன் மாதத்தில் நடைபெறவிருக்கின்றன. அச்சமயத்தில் உலகின் முக்கிய நட்சத்திரங்கள் பங்குபற்றும் நிகழ்ச்சியொன்று பங்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும். 5,000 பேர் பங்குபற்றும் அணிவகுப்பும் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்