தனது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களுடைய செலவின் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுக்கப்போகும் மால்டா.

ஐரோப்பிய நாடுகளொவ்வொன்றும் கொவிட் 19 பரவல்களைத் தடுக்க ஒரு பக்கத்தில் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன. சில நாடுகளின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதி சுற்றுலாத்துறையில் தங்கியிருப்பதால் அவைகள் கட்டுப்பாடுகளை மட்டும் போட்டுவிட்டு இருக்கமுடியாது. அடிப்படை வருமானத்தை உருவாக்கும் துறையான சுற்றுலாவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டிய நாடுகளிலொன்றாகக் குறிப்பிடக்கூடியது மால்டா.

மத்தியதரைக்கடலில், இத்தாலியின் சிசிலி தீவுக்குத் தெற்கேயிருக்கும் தீவுகளிலான நாடு மால்டா. கடலுக்கப்பால் துனீசியா, லிபியா, கிரீஸ் ஆகிய நாடுகள் எல்லையாக இருக்கின்றன. அதன் புவியியல் அமைப்பாலும், சரித்திரத்தாலும் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. 

கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிடும் மால்டாவின் சுமார் 500,000 பேரில் இறந்தவர்கள் சுமார் 400 பேராகும். நாட்டின் 37 % மக்களுக்கு ஒரு தடுப்பூசியையாவது கொடுத்திருக்கும் மால்டா 17 விகிதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் கொடுத்திருக்கிறது. தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் பிரிட்டனுக்கு அடுத்ததாக வேகமாகச் செயற்படும் நாடு மால்டாவாகும்.

வருடாவருடம் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நாடான மால்டா “எங்களிடம் வாருங்கள், உங்கள் செலவின் ஒரு பகுதியை நாமே தருகிறோம்,” என்று அறிவித்திருக்கும் முதலாவது நாடாகும். சுற்றுலா நிறுவனங்கள் மூலமில்லாமல் தனிப்பட்ட முறையில் தமது சுற்றுலாவை ஒழுங்குசெய்யும் பயணிகளே மால்டாவின் முக்கிய குறியாகும். 

இந்தத் திட்டம் மூலம் மால்டா தனது நாட்டுச் சுற்றுலாத் தங்குமிடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குக் கொடுக்கும் அதேயளவு மான்யத்தைத் தானும் கொடுக்குமென்பதே திட்டம். ஆகக்கூடியது ஒரு சுற்றுலாப்பயணி சுமார் 200 எவ்ரோக்களை மான்யமாகப் பெறக்கூடியதாக அத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக மால்டா தெரிவிக்கிறது. 

சுற்றுலாப் பயணிகள் ஜூன் முதலாம் திகதி முதல் மால்டாவுக்குள் நுழையலாம். அவர்கள் அதற்கு முந்தைய பத்து நாட்களுக்குள் கொவிட் தடுப்பூசி போட்டிருப்பதை நிரூபிக்கவேண்டும்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகிறவர்களுக்கும் மான்யம் கிடைக்குமென்றாலும், நடுத்தர விடுதிகளில் தங்குகிறவர்களுக்கு அதைவிட அதிகமான மான்யம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. பல சாமான்யர்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமது அன்றாட வாழ்க்கைக்குத் தங்கியிருப்பதால் அரசு தான் கொடுக்கும் மான்யம் நாட்டின் பலருக்கும் போய்ச் சேரவேண்டுமென்று எதிர்பார்க்கிறது. அத்துடன் சுற்றுலாத் துறைக்கு ஒரு ஊட்டச்சத்து அளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *