அரச குடும்பத்து மரணங்களுக்கு பாலங்களின் குறியீட்டுப் பெயர், முன்னரே திட்டமிட்ட ஏற்பாடுகள்.

கோமகன் பிலிப்பின் மறைவுச் செய்தியை நாட்டுக்கு அறிவித்த பிரதமர் பொறிஸ் ஜோன்சன்”Forth Bridge is down” என்று குறிப்பிட்டார்.

“இளவரசரின் மரணம் Forth Bridge is down” எனக் குறிக்கப்படுவது ஏன்?

https://vetrinadai.com/news/prins-philips-99/

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களது மரணங்களை அறி விப்பதும் மரணச் சடங்குகளை எவ்வாறு நடத்துவது என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு விடுகின்றன.அவற்றுக்குச் சில முக்கிய பாலங்களின் குறியீட் டுப் பெயர்களும் சூட்டப்படுகின்றன.

பிலிப்பின் மரணச்சடங்கு நடைமுறைகள் “Operation Forth Bridge” என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படுகின்றன.தேசிய
துக்கமும் இறுதி நிகழ்வுகளும் Operation Forth Bridge என்ற தலைப்பின் கீழேயே நடைபெறும்.மகாராணி எலிஸபெத், இளவரசர் பிலிப் இருவரது சம்மதத்துடன் இந்தக் குறியீட்டுப் பெயர்த் தெரிவும் அதன் கீழான மரணச் சடங்கு ஏற்பாடு களும் பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டன.

Forth Bridge என்பது ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ரயில் பாலத்தின் பெயர். யுனெஸ்கோவினால் அது பாரம்பரிய இடங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இளவரசர் பிலிப் Duke of Edinburgh என்ற அரச பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறார். அந்தப் பெயர் எடின்பேர்க்கைக் குறிப்பதால் அங்குள்ள Forth Bridge பாலத்தின் பெயரால் அவர் நினைவு கூரப்படுகிறார். அதனாலேயே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிலிப்பின் மரணச் செய்தி அறிவிப்பில்”Forth Bridge is down” என்று குறிப்பிட்டார்.

அரண்மனை மரணங்களை இவ்வாறு பாலங்களின் பெயரால் அறிவிக்கும் நடைமுறை, 1990 களின் முற்பகுதியில்
தீர்மானிக்கப்பட்டது. அரச குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் இவ்வாறு மறைவுக்குப் பிந்திய ஏற்பாடுகள் முன் கூட்டியே திட்டமிடப்படுவதில்லை. மகாராணி எலிஸபெத் மறைந்தால் அது “London Bridge” என்ற குறியீட்டுத் தலைப் பில் அறிவிக்கப்படும். அதுபோன்று முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் உயிரிழந்தால் அவரது அரச மரியாதைகள் “Menai Bridge” என்னும் பாலத்தின் பெயரில் நடக்கும்.

பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் பெரும் தொற்று நோய்க் காலத்தில் நிகழ்ந்துள்ள மரணம் என்ற ரீதியில் பிலிப்பின் இறுதி மரியாதை ஏற்பாடுகள் முன்னரே திட்டமிட்டதற்கு மாறாகக் கட்டுப்பாடுகளுடன் மிக அடக்கமான முறையிலேயே நடைபெறக்கூடும்.

அஞசலி செலுத்துவதற்காகத் திரள வேண்டாம் என்று நாட்டுமக்கள் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எட்டு நாள் தேசிய துக்கத்தை தொடர்ந்து பெரும்பாலும் எதிர்வரும் சனிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரச மரியாதை அன்றி முன்னாள் படைவீரர் என்ற முறையில் தனியே இராணுவ மரியாதைகளுடன் மட்டுமே அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.

(படம் :ஸ்கொட்லாந்தின் Forth Bridge பாலம்)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *