தமது அரசை அவமதித்த ரஷ்யத் தூதுவரின் செய்கையால் எரிச்சலடைந்த பல்கேரியர்கள் உக்ரேனுக்கு ஆதரவாக மாறுகிறார்கள்.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல்கள் ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் புகுந்த நாள் முதல் எழுந்தன. முன்னாள் சோவியத் ரஷ்யாவின் பிடியிலிருந்த ஒரு சில நாடுகள் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்து வந்தன. அவைகளிலொன்று பல்கேரியாவாகும். 

2004 ம் ஆண்டு முதல் நாட்டோ அமைப்பில் இணைந்த நாடான பல்கேரியாவின் அரசு உக்ரேனின் சுய உரிமையை ஆதரித்துக் குரல் கொடுத்தாலும் கூட பல்கேரியாவின் சாமான்ய மக்களிடையே ரஷ்யாவுக்குக் கணிசமான ஆதரவு போரின் முதல் வாரங்களில் பரந்திருந்தது. 

எரிபொருளைப் பொறுத்தவரையிலும் கூட நீண்ட காலமாகவே ரஷ்யாவிடமே தங்கியிருக்கும் நாடு பல்கேரியா. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் ரஷ்யாவின் எரிபொருள் கொள்வனவை நிறுத்தும் முடிவை எடுத்தும் கூட பல்கேரியா ஆரம்பக் கட்டத்தில் அதிலிருந்து விலக்குப் பெறவே முயற்சித்து வந்தது. அதன் முக்கிய காரணம் நாட்டின் அரசியலில் நீண்ட காலமாகவே ரஷ்யாவின் எரிபொருட்களின் விலை முக்கிய இடத்தைப் பெற்றுவந்தது. ரஷ்ய நிறுவனங்களான காஸ்புரோம், லுக் ஒயில் ஆகியவற்றுடன் மலிவான ஒப்பந்தந்தளைச் செய்துகொள்ளும் அரசியல்வாதிகளே பல்கேரியாவில் அரசாங்கத்தை நிறுவிவந்தார்கள். அதனால், பல்கேரியாவின் அரசு நீண்டகாலமாகவே அடிக்கடி தேர்தல்களையும், அரச கவிழ்ப்புக்களையும் எதிர்கொண்டுவந்தது.

கடந்த வாரங்களில் பல்கேரியாவுக்கான ரஷ்ய தூதுவர் எலனோரா மித்ரோபனோவா அடிக்கடி நாட்டின் அரசியல் பற்றியும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். சாமான்ய பல்கேரியர்கள் ரஷ்ய அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் அதனால் பல்கேரிய அரசும் ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ அமைப்பு ஆகியவையுடன் சேர்ந்து உக்ரேனுக்கு ஆதரவளிக்கலாது என்று அவர் குறிப்பிட்டார். அதையடுத்து, “பல்கேரிய அரசாங்கம் வெறும் கடைநிலை ஊழியர்களே,” என்றும் தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டார். 

பல்கேரிய அரசியலுக்குள் ரஷ்யத் தூதுவரின் மூக்கு நுழைப்பு படிப்படியாக மக்களின் ஆதரவை உக்ரேன் பக்கம் திருப்பியிருக்கிறது. கோபமடைந்த பல்கேரியப் பிரதமர் பெட்கோவ் தனது மொஸ்கோ தூதுவரை பல்கேரியாவுக்குத் திருப்பியழைப்பதாக அறிவித்தார். அதன் விளைவு ரஷ்யாவின் பல்கேரியத் தூதுவரின் வெளியேறமாகவும் முடிந்தது. ரஷ்யாவுடனான தற்போதைய எரிபொருள் கொள்வனவு ஒப்பந்தம் 2022 இல் முடிவடையும்போது தாம் வேறு இடங்களில் அதைக் கொள்வனவு செய்வதாகவும் அறிவித்தார் நாட்டின் எரிசக்தி அமைச்சர். 

அதையடுத்து வியாழனன்று பல்கேரிய மக்கள் முதல் தடவையாக மிகப்பெரும் உக்ரேன் ஆதரவு ஊர்வலமொன்றை நடத்தினார்கள். பல்லாயிரக்கணக்கானோர் அதில் பங்கெடுத்தனர். உக்ரேன் கொடியை உயர்த்தியபடி நாட்டின் பிரபலங்கள் பலர் அந்த ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள். “ரஷ்யாவின் அடுத்த நுழைவு எங்கள் நாட்டினுள்ளாக இருக்கலாம்,” என்ற எதிர்ப்புக் கோஷமும் அவர்களால் சுமந்து செல்லப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *