பார்ட்டிகேட் சம்பவத்தில் பங்குபற்றிய பலருக்குத் தண்டம் விதித்தது பிரிட்டிஷ் பொலீஸ்
கொரோனாப் பரவல் காலத்தில் பிரிட்டிஷ் மக்களுக்குக் கடுமையான முடக்கங்களை அறிவித்துவிட்டுத் பிரதமரின் வீட்டில் வழக்கம் போல மதுபானக் கொண்டாட்டங்களை நடத்தி வந்தவர்கள் பலர் மீது பொலீசார் தண்டம் விதித்திருக்கிறார்கள். அவர்கள் யார், எவரென்ற விபரங்கள் பொலீசாரால் வெளியிடப்படவில்லை.
நாட்டு மக்களின் நடமாட்டங்கள் பெருமளவில் முடக்கப்பட்டு அவர்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தியதைப் பொலீஸ் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. வெளியாகியிருக்கும் 20 தண்டங்கள் தாம் செய்துவரும் விபரமான விசாரணைகளின் முதலாவது கட்டமே என்று லண்டன் பொலீஸ் குறிப்பிட்டிருக்கிறது.
லண்டன் பொலீசாரின் விசாரணைகள் சுமார் 100 பேரின் சாட்சியங்களையும் கொண்டிருக்கின்றன. அவைகள் குறிப்பிட்ட அரசியல் வட்டார உறுப்பினர்கள் நடத்திப் பங்குபற்றிய சுமார் ஒரு டசின் விருந்துகளைப் பற்றி விசாரிக்கவிருக்கின்றன. விதிக்கப்பட்ட தண்டனைகள் 20 பேருக்கு அல்லாமல் குறைந்த எண்ணிக்கையுள்ளவர்களுக்கு வெவ்வேறு காரனங்களுக்காக விதிக்கப்பட்டவையாகும். தான் தண்டிக்கப்படும் பட்சத்தில் அவ்விபரங்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதாக போரிஸ் ஜோன்சன் உறுதியளித்திருக்கிறார்.
பிரிட்டிஷ் மக்களிடையே பெரும் எதிர்ப்பைப் பெற்றது மட்டுமன்றி தனது ஆதரவாளர்கள், சகாக்களிடையேயும் போரிஸ் ஜோன்சனும் இந்த விருந்துகளில் பங்குபற்றியதால் கடுமையாகச் சாடப்பட்டார். பொலீஸ் விசாரணை ஆரம்பித்தபோது ரஷ்யா – உக்ரேன் போர் ஆரம்பித்து ஊடகங்களின் கவனம் வேறு திசையில் திரும்பியிருப்பதால் பார்ட்டிகேட் விவகாரம் பற்றிய எதிர்ப்புக்கள் ஒதுங்கியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்