தாய்லாந்தின் மீது பதுங்கியிருந்து பாய்கின்றன கொரோனா வைரஸ்கள்!

கொரோனாத் தொற்றுக்களால் அதிகம் பாதிக்கப்படாத தென்கிழக்காசிய நாடுகளில் முதன்மையான ஒன்று தாய்லாந்தைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் 2020 மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து தாய்லாந்தின் எல்லைகள் வெளிநாட்டவர்களுக்கு மூடியிருந்தன.

சுற்றுலாப் பயணிகளாலும் அவர்களுடைய வருகையாலும் தனது பெரும் வருமானத்தைச் சம்பாதிக்கும் தாய்லாந்துக்கு அது பெரும் இழப்பாக இருப்பினும் கொரோனாத் தொற்றுக்களைப் பொறுத்தவரை அந்த நாடு தவிர்க்கப்பட்டிருந்தது. எனவே, கடந்த வருட இறுதிக்கட்டத்தில் நாட்டின் எல்லைகளை மெதுவாகத் திறக்கலாம் என்ற திட்டத்திலிருந்தது தாய்லாந்து அரசு. 

அந்த நோக்கத்தில் மண் போடுவதுபோல நாட்டின் தலைநகரின் அருகேயிருக்கும் பிரபல சந்தையொன்றில் ஆரம்பித்த தொற்று நாட்டில் ஆங்காங்கே பரவ ஆரம்பித்திருக்கிறது.

https://vetrinadai.com/news/covid-19-mahachai-market-thailand/

எனவே, தாய்லாந்து நாட்டின் பல பகுதிகளையும் “தொற்றும் பிராந்தியங்கள்,” என்று அறிவித்து அப்பிராந்தியங்களில் சமூக விலகல், வியாபார அடைப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

கடந்த வருட மார்ச் முதல் டிசம்பர் 10 வரை பெரும்பாலும் கொரோனாத் தொற்றுக்களே இல்லாமலிருந்த தாய்லாந்து அதன்பின் ஏற்பட்ட தொற்றுக்களால் இப்போது சுமார் 8,500 தொற்றுக்கள், 65 இறப்புக்கள் என்ற நிலைமையை அடைந்திருக்கிறது. சுமார் 101 நாட்கள் தொற்றே இல்லாமலிருந்த தாய்லாந்தில் தினசரி 250 – 500 புதிய தொற்றுக்கள் பதியப்படுகின்றன. சர்வதேச ரீதியில் இது பெரிய எண்ணிக்கையாக இல்லாவிடிலும் கூட தாய்லாந்தின் முன்பிருந்த நிலையிலிருந்து கடும் எச்சரிக்கை கொள்ளவேண்டிய நிலை என்பதில் அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள்.

30 பிராந்தியங்கள் கடுமையான தொற்று ஆபத்து உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உள்நாட்டுப் பயணங்கள் தடுக்கப்படுகின்றன. தலைநகரான பாங்கொக்கில் பாடசாலைகள், விளையாட்டிடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பொது இடங்கள், பொதுமக்கள் போக்குவரத்து ஆகியவைகளில் ஒவ்வொருவரின் மீதும் வெம்மை ஆராயப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *