மொரொக்கோ, ஜோர்ஜியா நாடுகளுக்கான உக்ரேன் தூதர்கள் திருப்பியழைக்கப்பட்டனர்.
உக்ரேனுக்குள் இராணுவத்தை அனுப்பிய ரஷ்யாவை அதற்கு ஏற்றபடி தண்டிக்காத நாடுகளான ஜோர்ஜியா, மொரொக்கோவில் பணியாற்றிய உக்ரேன் தூதுவர்கள் தமது கடமைகளைச் சரியான முறையில் செய்யவில்லை என்று குறிப்பிட்டு அவர்களைத் திருப்பியழைத்தார் உக்ரேன் ஜனாதிபதி.
“ரஷ்யாவின் ஆயுதங்கள், பொருளாதாரம் எவற்றின் மீதுமே நீங்கள் தூதுவராக இருக்கும் நாடுகளை போட வைக்க முடியாவிட்டால் வேறு வேலை தேடுங்கள்,” என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி செலின்ஸ்கி.
“அடுத்து வரும் வாரங்களில் நான் லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் எமது தூதர்களிடமிருந்து இதுபற்றிய திட்டவட்டமான செயற்பாடுகளை எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகளின் பாராளுமன்றங்கள், அரசியல், பொருளாதாரக் கூட்டணிகள் ஆகியவற்றின் மாநாடுகள் போன்றவற்றில் தொலைத்தொடர்பு மூலம் நேரடியாக தினசரி உரையாடி வரும் செலின்ஸ்கி ரஷ்ய இராணுவத்தை எதிர்த்து நிற்க தமக்கு அதிக பணபலமும், ஆயுதங்களும் வேண்டி வருகிறார். அதேசமயம் ராஜதந்திரம் மூலம் தூதுவர்கள் தத்தம் நாடுகளின் அரசுகளிடம் உதவியை நாடுவதும், ரஷ்யா மீது நடவடிக்கைகளை எடுக்க வைப்பதும் அவசியம் என்று குறிப்பிடுகிறார்.
போர் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி செலின்ஸ்கி உக்ரேனுக்கு வெளியே பயணிக்கவிருப்பதாக கியவின் ஆளுனர் விட்டாலி கிளிட்ச்கோ இன்று டுவீட்டியிருந்தார். செலின்ஸ்கி ஒரு குழுவினருடன் ஜேர்மனிக்குச் செல்லவிருப்பதாக கிளிட்ச்கோ குறிப்பிட்டிருந்தது பின்னர் உத்தியோகபூர்வமாக வாபஸ் வாங்கப்பட்டது. செலின்ஸ்கி உக்ரேனுக்குள்ளேயே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்