செக்கிய அரண்மனை உக்ரேன் அகதிகள் வாசஸ்தலம் ஆனது!

உக்ரேனிலிருந்து செக் குடியரசுக்குள் நுழைந்திருக்கும் 3 லட்சம் அகதிகளில் சிலருக்கு அந்த நாட்டின் முக்கியமான அரண்மனையொன்றில் வாழ இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஒரு டசின் குழந்தைகளும் பத்துப் பெண்களும் The Becov nad Teplou castle இல் தங்கவைக்கப்பட்டிருப்பட்டிருக்கிறார்கள். 

அந்த அரண்மனைக்கு வழிகாட்டிகளாக வருபவர்கள் தங்கும் அறைகள் அகதிகளுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த  அரண்மனை இருக்கும் பெக்கோவ் நகர் சுமார் 1,000 குடிமக்களைக் கொண்டது. சுமார் 60 உக்ரேன் அகதிகள் அந்த நகரில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

செக் குடியரசின் பாரம்பரியங்களில் நாட்டின் அரச அணிகலங்களுக்கு அடுத்ததாக மதிக்கப்படுபவை The Becov nad Teplou castle என்றழைக்கப்படும் அரண்மனையில் இருக்கின்றன. கிறிஸ்துவுக்குத் திருமுழுக்குக் கொடுத்த யோவானின் எலும்புகள் உட்பட வேறு புனிதர்களின் கல்லறைகளும் குறிப்பிட்ட அரண்மனையில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெளியூரிலிருந்து வரும் வழிகாட்டிகளின் அறைகள் அகதிகளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால் பிரபலமான சுற்றுலா தலமான அந்த அரண்மனைக்கு வழிகாட்டிகளாக உள்ளூரில் இருப்பவர்கள் மட்டும் இவ்வருடம் பணியாற்றுவார்கள் என்று நாட்டின் பாரம்பரியம் பேணும் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. குறிப்பிட்ட அரண்மனை தவிர அத்திணைக்களத்தின் வசமிருக்கும் வேறு கட்டிடங்களிலும் உக்ரேன் அகதிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *