ரஷ்ய ராஜதந்திரியை நாட்டைவிட்டு வெளியேற்றுபவர்களின் வரிசையில் அடுத்ததாக ருமேனியா.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல நாடுகளும் ரஷ்யாவின் ராஜதந்திரிகளைத் தமது நாட்டில் சந்தேகத்துக்குரிய உளவுக்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றி வருகிறார்கள். அவர்களில் அடுத்ததாக இடம்பெற்றிருக்கிறது ருமேனியா. அலெக்ஸி கிரிச்சியேவ் என்ற ரஷ்யத் தூதரக ஊழியரை நாட்டைவிட்டு வெளியேறும்படி பணித்திருக்கிறது ருமேனியா.  

2014 இல் செக் குடியரசின் இராணுவத் தளபாடங்களிருந்த கிடங்கொன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு ரஷ்யாவின் உளவுத் துறையே காரணமென்று விசாரணைகளில் தெரியவந்ததாகக் குறிப்பிட்டு 18 ரஷ்யத் தூதரக ராஜதந்திரிகளை வெளியேற்றியது செக் குடியரசு. இரண்டு பேர் கொல்லப்பட்ட அந்த நடவடிக்கை  ஒரு தீவிரவாதச் செயலுக்கு இணையானது என்று செக் குடியரசின் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக ரஷ்யா தனது நாட்டின் செக் குடியரசுத் தூதுவராலயத்திலிருந்து 20 பேரை நாட்டை விட்டு வெளியேற்றியது. 

ரஷ்யாவுக்குப் பாடம் கற்பிக்கத் தமக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் செய்யவேண்டுமென்ற செக் குடியரசின் வேண்டுகோளுக்கிணங்கி லித்தவேனியா, லத்வியா, எஸ்ட்லாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஏழு ரஷ்ய ராஜதந்திரிகளைத் தமது நாடுகளிலிருந்து வெளியேற்றின. 

இதைத்தவிர மார்ச் மாதத்தில் தமது இரண்டு ராஜதந்திரிகளை ரோமிலிருந்து உளவுக்குற்றம் சாட்டி வெளியேற்றியதற்குப் பதிலடி என்று சொல்லி ரஷ்யா தனது நாட்டின் இத்தாலிய ராஜதந்திரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *