புட்டினின் வெற்றியும் ஜனநாயகத்தின் அளவுகோலும்

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா

ரஸ்ய அதிபருக்கான தேர்தலில் நடப்பு அதிபரான விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றுள்ளார். வழக்கத்தை விடவும் அதிகளவு எண்ணிக்கையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு கொண்டதாகவும், அதிக விழுக்காடு வாக்குகளைப் பெற்று புட்டின் வெற்றியைத் தழுவிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான ரஸ்யாவில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள போதிலும், அந்தத் தேர்தலைக் கண்டிக்கும் செய்திகள் மேற்குலக ஊடகங்களில் வலம் வருவதைப் பார்க்க முடிகின்றது.

அதேவேளை, தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்குடன் பல வன்முறைத் தாக்குதல்களை – ரஸ்யாவுக்குள் ஊடுருவி – உக்ரைன் மேற்கொண்டிருந்த போதிலும் அவை யாவும் முறியடிக்கப்பட்டு விட்டதாக ரஸ்யத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாவது தடவையாக அதிபராகத் தெரிவாகி உள்ள புட்டினின் வெற்றி ஏற்கனவே எதிர்வு கூறப்பட்ட ஒன்றே. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒருவர் கூட இரட்டை எண்ணிக்கை விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை என்பது ரஸ்யாவில் புட்டினுக்கு உள்ள செல்வாக்கின் அளவுகோலாகக் கொள்ளப்பட முடியும். உக்ரைனில் கடந்த இரண்டு வருடங்களாகப் போரை நடத்திக் கொண்டிருக்கும் ரஸ்யா, மேற்குலகின் பொருளாதார முற்றுகைக்கு பெரிதும் ஆளாகி உள்ள போதிலும், ரஸ்யாவில் அதிபர் புட்டினின் செல்வாக்கு மென்மேலும் அதிகரித்து வருவது மேற்குலகிற்கு உவப்பு இல்லாத ஒரு செய்தி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இத்துணை மக்கள் ஆதரவு பெற்றவராக புட்டின் விளங்குகின்ற போதிலும், அவருக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்குலகு மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதுவும் உண்மையே.

ரஸ்ய அரசுத் தலைவருக்கான தேர்தல் – திருத்தப்பட்ட புதிய தேர்தல் விதிகளின் பிரகாரம் – மார்ச் 15 முதல் 17 வரையான 3 நாட்கள் நடைபெற்றது. நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 77.44 விழுக்காடு வாக்காளர்கள் பங்குகொண்டு தங்கள் வாக்குகளைச் செலுத்தி இருந்தனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற எட்டாவது அரசுத் தலைவர் தேர்தல் இது. இந்தத் தேர்தலே அதிகளவு விழுக்காடு வாக்காளர்கள் கலந்து கொண்ட தேர்தலாகப் பதிவாகி உள்ளது. அது மாத்திரமன்றி அளிக்கப்பட்ட வாக்குகளில் 88.48 விழுக்காடு வாக்குகளைப் பெற்று புட்டின் பெற்ற வெற்றியும் சாதனையாக மாறி உள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் நிக்கலோய் கரிற்றனோவ் 4.37 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றார். புதிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விலாடிஸ்லவ் டவன்கோவ் 3.85 விழுக்காடு வாக்குகளையும், லிபரல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லியோனிட் ஸ்லற்ஸ்கி 3.20 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

ரஸ்யத் தேர்தலை நிராகரிக்கும் அல்லது ஏற்றுக் கொள்ள மறுக்கும் மேற்குலகு, நடைபெற்ற தேர்தல் நியாயமான அடிப்படையில் நடைபெறவில்லை எனக் கூறி வருகின்றது. எதிர்ப்பதற்கு முறையான போட்டியாளர் இல்லாத ஒரு களத்தைக் கட்டமைத்து, புட்டின் எதிர்ப்பாளர்களைச் சிறைச்சாலைகளில் அடைத்துவிட்டு நடைபெற்ற தேர்தல் இதுவென்பது மேற்குலகின் நிலைப்பாடு. அது மாத்திரமன்றி, உக்ரைனில் ரஸ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் செல்லுபடியற்றது என்பதுவும் ஒரு மேலதிகக் குற்றச்சாட்டு.

இத்தகைய விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள புட்டின், “தேர்தல் தொடர்பில் தெரிவிக்கப்படும் எதிர்மறைக் கருத்துகள் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றே. அவர்கள் குறிவைத்துத் தாக்குவது என்னை அல்ல. மாறாக, எனக்குப் பெருவாரியாக வாக்களித்த எனது தேசத்தின் மக்களையே” எனக் கூறியுள்ளார்.

இத்தனைக்கும் புட்டினின் தேர்தல் வெற்றி ஒன்றும் எதிர்பார்க்கப்படாத ஒன்று அல்ல. தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகும் முன்னரேயே புட்டினின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேற்குலகம் சொல்வது போன்று முறையான போட்டியாளர் இல்லாத களத்தில்தான் புட்டின் போட்டியிட்டார். ஆனால், அது அவரின் தப்பு இல்லை. புட்டினின் எதிரிகள் என மேற்குலகம் அரவணைத்துக் கொள்ளும் நபர்கள் மக்களின் செல்வாக்கைப் பெறத் தவறியது புட்டினின் தவறா? இதனை மேற்குலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

புட்டின் மீது மேற்குலகம் இத்தகைய காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடனடிக் காரணம் அவர் – மேற்குலகின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் – உள்நாட்டில் பலத்த செல்வாக்கு உள்ளவராக விளங்குவது. இரண்டாவது உடனடிக் காரணம் மேற்குலகு எதிர்பார்த்தவாறு உக்ரைன் போரில் ரஸ்யா தோல்வியைத் தழுவாமல், பல சுற்றுப் பொருளாதாரத் தடைகளையும் தாண்டி நிமிர்ந்து நிற்பது.

இதனையெல்லாம் விடச் சிறப்பான காரணம் சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னான ரஸ்யாவின் எழுச்சி. சோவியத் ஒன்றியத்தைச் சிதைத்து, பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வந்த மேற்குலகம் ரஸ்யா பல துண்டுகளாக உடைந்துபோய் வலுவிழந்த ஒரு நாடாகப் போய்விட வேண்டும் என எதிர்பார்த்தது. அவ்வாறு நிகழும் போது ரஸ்யாவின் இயற்கை வளங்களைத் தாம் நினைத்தவாறு கொள்ளையிட வாய்ப்புக் கிடைக்கும் என மேற்குலகம் காத்திருந்தது.

ஆனால், சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் மேனாள் அதிகாரியான புட்டினின் அரசியல் பிரவேசம் மேற்குலகின் கனவை அடியோடு அழித்துவிட்டது. 1999 ஓகஸ்ற் மாதத்தில் ரஸ்யாவின் தலைமை அமைச்சராக நியமனம் பெற்ற புட்டின், போரிஸ் யெல்ட்சினின் பதவி விலகலை அடுத்து பதில் தலைவராகப் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து இன்றுவரை நான்கு முறை ஜனாதிபதியாகவும் ஒரு முறை தற்போதைய தலைமை அமைச்சர் டிமித்ரி மெட்வடேவின் பதவிக் காலத்தில் தலைமை அமைச்சராகவும் 24 ஆண்டுகள் ரஸ்யாவின் தலைமைப் பீடத்தில் அமர்ந்து ரஸ்யாவை வழிநடத்தி வந்திருக்கிறார்.

அணுவாயுத வல்லரசான ரஸ்யாவே உலகில் அதிக எண்ணிக்கையிலான அணு குண்டுகளைக் கைவசம் வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. தற்போது உக்ரைனில் நடைபெற்றுவரும் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளைக் களமிறக்குவது தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்றுவரும் நிலையிலும் அச்சமின்றிச் செயற்பட்டுவரும் புட்டின் இன்று மேற்குலகின் மிகவும் வெறுக்கப்படும் நபராக உள்ளதில் வியப்பேதும் இல்லை.

ஜனநாயக நாடுகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிலும் முழுமையான, தூய்மையான ஜனநாயகம் இல்லை என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தே. எந்தவொரு நாடாக இருந்தாலும் ஜனநாயகத்தின் கூறுகளும் அதன் எதிர்க் கூறுகளும் கலந்தே இருக்கும். இதற்கு எந்தவொரு நாடும் விதிவிலக்காக இருக்க முடியாது. இன்றைய உலகில் தூய்மையான ஜனநாயகத்தை எதிர்பார்ப்பதும் தவறே. இந்நிலையில் ரஸ்யாவில் மாத்திரம் தூய்மையான, அப்பழுக்கற்ற ஜனநாயகம் நிலவ வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயமாகும்?

புட்டினின் தேர்தல் வெற்றி தொடர்பிலான விமர்சனங்களைப் படிக்கும் போது “சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா” என்ற திரைப்படப் பாடல் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது.

நன்றி வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *