சீனாவின் பெரிய நகரங்கள் பல கொவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன.
கொவிட் 19 பரிசீலனைகளை மிகப் பெரிய அளவில் சீனாவின் பெரிய நகரங்கள் வழக்கத்துக்குக் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான ஷங்காய், அடுத்து பீஜிங்கில் படிப்படியாகப் பரிசீலனைகள் கொண்டுவரப்பட்டு அவை வழக்கமாகிவிட்டிருக்கின்றன. சீன அரசின் “ஒரு கொவிட் நோயாளியும் இருக்கலாகாது,” என்ற நிலைப்பாட்டைக் கைவிடாமல் மற்றைய பெரிய நகரங்களும் பரிசீலனைகளையும், முடக்கங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வருடாந்தர விடுமுறைக்காலம் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. கூட்டங்கூட்டமாக மக்கள் தமது விடுமுறைகளுக்கு வெவ்வேறு இடங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் காலம் இது. இம்முறை எந்த ஒரு நகரமும் மற்றைய நகரங்களிலிருந்து கொவிட் 19 தொற்றுள்ளவரா என்று தெரியாமல் எவரையும் உள்ளே விடத் தயாராக இல்லை. உள்ளூர்களுக்குள் நடமாட்டமும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
பீஜிங்கின் பூந்தோட்டங்களுக்குள் நுழைவதற்கு ஒருவர் தனக்குக் காடந்த 48 மணி நேரம் கொரோனாத்தொற்று உண்டாகியிருக்கவில்லை என்ற சான்றிதழ் காட்டவேண்டும். இவ்வார இறுதியில் முடிவடையவிருக்கும் விடுமுறைக் காலத்துக்குப் பின்னரும் பெருமளவிலான பரிசீலனைகளும், நகரங்களைப் பகுதிகளாகப் பிரித்து முடக்கம் செய்வதும் வழக்கமாகும் என்று அரசு அறிவித்திருக்கிறது. சகல பொது இடங்களிலும், போக்குவரத்துக்களிலும் தொற்று இல்லையென்று சான்றிதழ் காட்டுபவர்களே பயணிக்கலாம்.
சீன அரசின் கொரோனாக் கட்டுப்பாடுகள் மிகப் பெருமளவில் இருந்தாலும், நாடெங்கும் கொவிட் 19 பரிசீலனை செய்துகொள்ளும் வசதிகள் மக்களுக்கு எளிதாக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் எத்தனை காலம் தொடரும் என்ற விபரமெதுவும் எவருக்கும் தெரியாது.
சாள்ஸ் ஜெ. போமன்