வெனிசுவேலாவில் நம்பிக்கை துளிர்க்கும் அதேசமயம் எதிர்க்கட்சிக்குள் பிளவுகள் வெடிக்கின்றன.
ரஷ்யா மீதான பொருளாதார முடக்க நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்கா அங்கிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்திக்கொண்டது. பதிலாக வெனிசுவேலாவின் சர்வாதிகாரத் தலைவரான நிக்கொலாஸ் மடூரோவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அங்கிருந்து எரிபொருளை வாங்கத் திட்டமிட்டிருகிறது. மடூரோவின் எதிர்த்தரப்பினரில் ஒரு பகுதியினர் அப்படியான ஒரு நகர்வு மடூரோ தொடர்ந்தும் நாட்டில் ஜனநாயகத்துக்கான வாசல்களை மூடிவைத்திருக்கவே உதவும் என்று ஜனாதிபதி ஜோ பைடனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
வெனிசுவேலாவின் தலைவர் மடூரோவுடன் அமெரிக்க அரசு நெருங்கியதை அடுத்து மடூரோ தனது போக்கில் மாற்றம் காட்டியிருக்கிறார். இதுவரை காலமும் நாட்டின் அரசியல் மைதானத்தில் மாற்றங்கள் கொண்டுவர எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்த மறுத்து வந்த அவர் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் விளைவாக சர்வதேச முடக்கங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டு மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இலேசாகத் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.
மடூரோவின் எதிர்த்தரப்பினரும், மனித உரிமை இயக்கத்தினர் பலரும் அவர் எதிர்க்கட்சியினருடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்று கருதுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு மடூரோ எவ்வித மாறுதல்களையும் நாட்டின் அரசியலில் காட்டாதவரை அமெரிக்கா வெனிசுவேலா மீதான முடக்கங்களை நீக்குதல் பற்றியதாகும்.
நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளால் வெனிசுவேலா தனது எரிபொருளை அமெரிக்கத் தடைகளை மீறக்கூடிய ஒரு சில நாடுகளிடம் குறைந்த விலையில் தான் விற்கமுடிகிறது. அதனால், தினசரி சுமார் 18 மில்லியன் டொலர்களை இழந்து வருகிறது. அந்த நிலைமை மாறுவது நாட்டின் பொருளாதாரத்துக்கும், மக்களின் வாழ்வுக்கும் நல்லது என்று ஒரு சாரார் அபிப்பிராயப்படுகிறார்கள். இன்னொரு சாரார் அமெரிக்காவின் தடைகளை நீக்க ஆதரவு தெரிவிக்கிறவர்களைத் துரோகிகள் என்று விமர்சிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்