உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் விமர்சனங்களுக்குச் சீனாவின் பதில் “தணிக்கை”.
சீன அரசின் “ஒரு கொவிட் 19 தொற்றும் அனுமதிக்கப்படாது,” என்ற நிலைப்பாட்டின் விளைவு சர்வதேச அளவில் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதித்து வருகிறது. நீண்டகாலமாகப் பொதுமுடக்கங்களால் சுருங்கியிருந்த உலகப் பொருளாதாரம் தலையெடுக்கும் சமையத்தில் சீனா மீண்டும் பல நகரங்களில் முழு அல்லது பகுதிகளாலான பொது முடக்கங்களைக் கொண்டுவந்திருக்கிறது. அந்த நடவடிக்கையை உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் செவ்வாயன்று தனது பத்திரிகைச் சந்திப்பு ஒன்றில் சாடியிருந்தார், “சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல, கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்த வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,” என்று டெட்ரோஸ் அட்னோம் கபிரியேசுஸ் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரம் நடந்த சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி உயர்மட்டக் கூட்டத்தில் அதன் தலைவரான ஷீ யின்பிங் “எந்த ஒரு கொரோனாத் தொற்றையும் விட்டு வைக்க மாட்டோம்,” என்பதே தொடர்ந்தும் சீனாவின் தெளிவான நிலைப்பாடு என்று அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டார். அத்துடன் “அரசின் நிலைப்பாட்டைத் தவறாக விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், ஏளனம் செய்பவர்கள், சந்தேகத்துக்கு உட்படுத்துகிறவர்கள் எல்லோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றும் அறிவித்திருந்தார்.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் சொன்னவை உடனடியாகச் சீனாவில் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அதற்கான காரணம் அக்கூற்று பொறுப்பில்லாமல் வெளியிடப்பட்டது என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது. சீனாவின் சமூக வலைத்தளங்களில் உடனடியாக கொவிட் 19 பற்றி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்கள் நீக்கப்பட்டன.
சீன அரசு தனது கொவிட் பரிசீலனைகளை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. வேறெவரும் சீனா என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்கு வாய்ப்புக் கொடுக்கலாகாது என்ற நிலைப்பாட்டிலேயே சீன அரசு இயங்குகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்