நாட்டோ அமைப்பில் சேர பின்லாந்து, சுவீடன் தயாராகிவிட்டன.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அணிசேரா நாடுகளாக இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவை வரவிருக்கும் வாரத்தில் நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்ள விண்ணப்பிக்கப் போவது முடிவாகிவிட்டது. பின்லாந்தின் பிரதமரும், ஜனாதிபதியும் தமது நாட்டின் முடிவு நாட்டோவில் சேர்வது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
பின்லாந்தைப் போலவே சுவீடனிலும் நாட்டோ அமைப்பில் சேர்வதற்கு மறுப்புத் தெரிவித்து வந்த சோஷியல் டெமொகிரடிக் கட்சியினர் ஞாயிறன்று நடந்த தமது கட்சி மாநாட்டில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். அதன் மூலம் சுவீடனின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவு நாட்டோ அமைப்பில் சேர்வதற்குக் கிடைத்திருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்வும் தற்போதைய நிலைமையில் அதுவே சுவீடனுக்கு உகந்தது என்று வெள்ளியன்று தெரிவித்திருந்தது.
உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்த காரணமான “நாட்டோ அமைப்பில் எமது எல்லை நாடுகள் சேரக்கூடாது,” என்ற எண்ணத்துக்கு மாறாகவே ஐரோப்பிய அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது. உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பும், அதையடுத்து ரஷ்யா வெளியிட்டு வரும் மிரட்டல்களுமே சுவீடனையும், பின்லாந்தையும் நாட்டோ அமைப்பில் சேர்வதற்காக மிகக் குறுகிய காலத்தில் தூண்டியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
சுவீடனைப் பொறுத்தவரை பல தசாப்தங்களாகவே நாட்டோ அமைப்புடன் இரகசியமாகத் தனது பாதுகாப்புக்கான நகர்வுகளில் செயற்பட்டு வந்தது. அதே சமயம் பின்லாந்து ஒரு ஆக்கிரமிப்பை எதிர்நோக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவுவதாகவும் ஒப்பந்தம் செய்திருந்தது. “அமைதிக்கான பாதுகாப்பு,” என்ற பெயரில் சுவீடன் நாட்டோ அமைப்புடன் சேர்ந்து இராணுவ, உளவுத்துறைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்திருந்தது. அச்சமயத்தில் சுவீடனின் இராணுவத்துடன் பின்லாந்து இராணுவமும் பங்குபற்றி வந்தது.
இவ்விரண்டு நாடுகளும் நாட்டோ அமைப்பில் சேருவது ஓரிரு வாரங்களுக்கு முன்னரே தெளிவாகிவிட்ட நிலையில் ரஷ்யா புதிய மிரட்டல்களை வெளியிடவும் தயங்கவில்லை. பின்லாந்துக்கு ரஷ்யா விற்றுவந்த மின்சாரத்தின் இணைப்புகள் ஓரிரு நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டன. நாட்டோவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை இந்த நாடுகள் தமது எல்லைக்குள் கொண்டுவர முற்படுமானால் நிச்சயமாக அதற்கான பதிலடிகள் கொடுப்போம் என்றும் ரஷ்ய சார்பில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்