அமெரிக்கப் பல்பொருள் அங்காடியில் நிறவெறிக்கொலைகள் 10.

சனியன்று பிற்பகல் அமெரிக்காவின் பவலோ Buffalo நகரின் பல்பொருள் அங்காடியொன்றினுள் 18 வயதான வெள்ளையன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறான். 10 பேர் கொல்லப்பட்டு மூன்று பேர் காயமடைந்த அந்த நிகழ்வுக்கான காரணம் இன,நிற வெறியே என்று பொலீசார் குறிப்பிட்டு விசாரணையைத் தொடர்கிறார்கள்.

இராணுவ உடையுடன் தலைக்கவசம் அணிந்தபடி தானியங்கித் துப்பாக்கி ஒன்றால் தன்னைச் சுற்றியிருந்தவர்களைச் சுட்டுத்தள்ளிய குறிப்பிட்ட 18 வயதுக்காரன் பொலீசாரிடம் சரணடைந்திருக்கிறான். அவனது தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த படம் பிடிக்கும் கருவி மூலம் அவன் தனது துப்பாக்கிச் சூட்டை நேரடி ஒளிபரப்புச் செய்திருக்கிறான். அவன் பவலோ நகரத்திலிருந்து 300 கி.மீ தூரத்திலிருக்கும் இன்னொரு நகரிலிருந்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கிரைஸ்சேர்ச் – நியூசிலாந்து, எல் பாசோ – டெக்ஸாஸ் ஆகிய நகரங்களில் முன்பு நடந்த இன, நிறவெறிக் கொலைகளால் ஈர்க்கப்பட்ட 18 வயதுக்காரன் தனது நடத்தைக்கு முன்னர் தனது இன, நிறவெறிக் கோட்பாடுகள் பற்றிய பட்டயம் ஒன்றையும் இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறான் என்பது தெரியவந்திருக்கிறது. அவன் யூதர்களையும், முஸ்லீம்களையும் கடுமையாக வெறுப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறான்.

பல அமெரிக்க அரசியல்வாதிகளும் நடந்த கொலைகளை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *